/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வரை சந்தித்து முறையிட விசைத்தறி கூட்டமைப்பு திட்டம்
/
முதல்வரை சந்தித்து முறையிட விசைத்தறி கூட்டமைப்பு திட்டம்
முதல்வரை சந்தித்து முறையிட விசைத்தறி கூட்டமைப்பு திட்டம்
முதல்வரை சந்தித்து முறையிட விசைத்தறி கூட்டமைப்பு திட்டம்
ADDED : ஜூலை 25, 2024 12:09 AM
பல்லடம் : மின் கட்டண உயர்வு தொடர்பாக, முதல்வரை சந்தித்து முறையிடுவது என, விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளனர்.
இக்கூட்டமைப்பின் பொருளாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சார்ந்து, 6 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 90 சதவீத விசைத்தறிகளில் கூலி அடிப்படையில்தான் நெசவு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வரும் கூலி பிரச்னையால், தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. நீண்ட காலமாக, விசைத்தறி தொழில் செய்து வரும் பலர், தறிகளை பழைய இரும்புக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் பாவு நூல் சப்ளையும் குறைந்துள்ளது.
விசைத்தறி தொழிலின் நிலை கருதியே கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்த, 500 யூனிட் இலவசம் மின்சாரம் தற்போது, ஆயிரம் யூனிட்டாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விசைத்தறிகள் பாதிக்கப்படும் என்பதாலேயே, மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், தமிழக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால், விசைத்தறி உரிமையாளர்கள் உட்பட தொழிலை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து முறையிட தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

