/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பதிவுத்தபால் அனுப்புவதில் சிக்கல்
/
பதிவுத்தபால் அனுப்புவதில் சிக்கல்
ADDED : மார் 25, 2024 12:53 AM
பல்லடம்;பல்லடம் தபால் அலுவலகத்தில் பதிவுத்தபால் அனுப்பும் வசதியை மாலை 5:00 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் ஜெயபிரகாஷ் வீதியில், தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மதியம் 3:00 மணி வரை மட்டுமே பதிவு தபால் அனுப்பும் வசதி உள்ளது. இதை, மாலை 5:00 மணி வரை நீட்டிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது: பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டு வந்த கிளை தபால் அலுவலகம், காரணம் இன்றி மூடப்பட்டது.
தற்போது, பல்லடம் வட்டாரத்துக்கு பிரதான தபால் அலுவலகமாக, ஜெயபிரகாஷ் வீதியில் அமைந்துள்ள தபால் அலுவலகம் உள்ளது.
இங்கு மதியம் மூன்று மணி வரை மட்டுமே பதிவு தபால் அனுப்பும் வசதி உள்ளது. இதற்கு மேல் பதிவு தபால் அனுப்ப திருப்பூர் தான் செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் திருப்பூர் செல்வதற்குள் நேரம் முடிந்து விடும்.
பல்லடம் வட்டார பகுதியில், ஜவுளி நிறுவனங்கள், கறிக்கோழி உற்பத்தி, விசைத்தறி, தொழிற் சாலைகள் என எண்ணற்ற தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன.
தனிப்பட்ட ரீதியாகவும், அரசு அலுவல் பணிகளுக்காகவும், தொழில் நிறுவனத்தினர், பொதுமக்கள் அதிகளவு தபால் அலுவலகத்தை நாடுகின்றனர்.
மதியம் 3:00 மணி வரை மட்டுமே பதிவித்தபால் அனுப்ப முடியும் என்பது, தபால் துறையின் சேவை குறைபாடாக உள்ளது.
எனவே, தொழில்துறையினர், பொதுமக்களின் நலன் கருதி பதிவு தபால் அனுப்பும் நேரத்தை, மாலை 5:00 மணி வரை நீட்டிப்பு செய்ய தபால் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

