/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூத் சிலிப் வினியோகத்தில் சிக்கல்
/
பூத் சிலிப் வினியோகத்தில் சிக்கல்
ADDED : ஏப் 12, 2024 01:23 AM

திருப்பூர்;திருப்பூர் தெற்கு தொகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பகுதியில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பு மற்றும் பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.தேர்தல் பிரிவு அலுவலர்கள் தற்போது ஓட்டுப்பதிவு பணிக்காக, ஓட்டுச் சாவடிகள் தயார் செய்தல், ஓட்டுப்பதிவு மெஷின்கள் தயார்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அவ்வகையில் திருப்பூர் லோக்சபா தொகுதியில் அமைந்துள்ள திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி, மாநகராட்சி பகுதிகளில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.திருப்பூர் தெற்கு தொகுதியில், 2,68,335 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு தற்போது 248 ஓட்டுச் சாவடிகள் ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த ஓட்டுச் சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு, வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள ஓட்டுப்பதிவுக்குப் பயன்படுத்தும் வகையில், பூத் சிலிப் வழங்கும் பணி தற்போது நடக்கிறது. இதில், 242 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிக்கல் என்ன?
திருப்பூரைப் பொறுத்தவரை பெருமளவு தொழிலாளர்கள் உள்ள பகுதி. இவர்களில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் அடிக்கடி தங்கள் பணிபுரியும் இடத்துக்கு ஏற்ற வசிப்பிடத்தை மாற்றிக் கொள்வர். அவ்வகையில் வீடு மாறிச் சென்ற பலரும் வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றத்தை முறையாக பதிவு செய்யாமல், குழப்பம் நீடிக்கிறது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அவர்களைத் தேடிச் சென்று பூத் சிலிப் வழங்குவதில் பெரும் சிரமம் உள்ளது.
அபார்ட்மென்ட்களில் 'தடை'
மேலும், சில பகுதிகளில் தனியார் அபார்ட்மென்ட்களில், பூத் சிலிப் வழங்கச் செல்லும் ஊழியர்களை அங்குள்ள செக்யூரிட்டிகள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. இதனால், ஊழியர்கள் இதை வழங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளால் பூத் சிலிப் வழங்குவதில் முழு இலக்கையும் அடைவது சந்தேகம். இதற்கு தீர்வு காண இது போன்ற குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு உரிய அறிவுரை தேர்தல் பிரிவு சார்பில் வழங்க வேண்டும்.

