/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை
/
கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை
ADDED : ஏப் 17, 2024 01:02 AM

அவிநாசி:அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம் பாளையத்தில் உள்ள பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (எண்: கே.2046) உள்ளது. நேற்று காலை வாடிக்கையாளர்கள் சிலர், நேற்று கூட்டுறவு சங்கத்தின் முன் திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, வாடிக்கையாளர் கூறியதாவது:
பழங்கரை சங்கத்தில், டெபாசிட் தொகையாக, 5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை, ஏற்தாழ, 2 கோடி ரூபாய் வரை செலுத்தியுள்ளோம். டெபாசிட் தொகையை திருப்பி கேட்டால் பணம் செலுத்தியதற்கான எந்த வித ஆவணமும் இல்லை என்கின்றனர்.
இது குறித்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி தர வேண்டும் என சங்கத்திற்கு வந்து நேரடியாக கோரிக்கை விடுத்தோம். ஆனால், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட எங்களுக்கு உடனடியாக கூட்டுறவு சங்கத்தில் செலுத்திய பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல், கூட்டுறவு சங்க செயலாளர் (பொறுப்பு) பாட்ஷா, முன்னாள் சங்க தலைவர் தனபால் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அதில், கூட்டுறவு துறை அதிகாரிகளும் தேர்தல் பணியில் உள்ளதாலும், செயலாளர் வடிவேல் மருத்துவ விடுப்பில் இருப்பதால் ஓரிரு நாட்களில் இதுகுறித்து திருப்பூர் கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார் என உறுதி அளித்தனர்.
இதனால், போராட் டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

