/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி துணைத்தலைவர் பெயரில் வாகனங்கள் பதிவு?
/
ஊராட்சி துணைத்தலைவர் பெயரில் வாகனங்கள் பதிவு?
ADDED : ஆக 30, 2024 06:32 AM

பல்லடம்: பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில், பி.டி.ஓ., மனோகரிடம் நேற்று மனு அளித்தனர். கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:
கரடிவாவி ஊராட்சியின் பயன்பாடு கருதி, தன்னார்வலர்கள், பொதுமக்களால் ஏராளமான பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் சார்பில், இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவையும் ஊராட்சியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் கரடிவாவி ஊராட்சி என பெயர் எழுதப்பட்டுள்ள நிலையில், இவை அனைத்தும் தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தி.மு.க.,வை சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர் மாரிமுத்து பெயரில் பதிவாகியுள்ளன. ஊராட்சியின் பெயருக்கு மாற்றப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட பி.டி.ஓ., மனோகர் கூறுகையில், 'இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
ஊராட்சி துணைத்தலைவர் மாரிமுத்து கூறுகையில், ''வாகனங்களை நன்கொடையாக பெறும்போது யாரோ ஒருவர் பெயரில் மாற்ற வேண்டும் என்பதால், எனது பெயரில் பதிவு செய்தனர். ஊராட்சியின் பெயரில் பெயர் மாற்றம் செய்ய ஆர்.டி.ஓ.,விடம் கேட்டுள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்றார்.

