/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கவுன்சிலர்கள் போட்ட கணக்கு
/
ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கவுன்சிலர்கள் போட்ட கணக்கு
ADDED : ஜூலை 01, 2024 12:35 AM
கவுன்சிலர்கள் போட்ட கணக்கு
உடுமலை ஒன்றிய குழு கூட்டத்துல, வழக்கமா கவுன்சிலர்கள் லேட்டாவே வருவாங்க. கூட்டம் முடியறதுக்கு முன்னாடியே கிளம்பி போயிருவாங்க. பெரும்பாலான கவுன்சிலர்கள் பேசவே மாட்டாங்க. ஆனா, இந்த தடவ கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே அரங்கத்துல வந்து கவுன்சிலர்கள் காத்திருந்தாங்க.
ஒன்றிய அதிகாரி ஒருத்தரு கிட்ட இதப்பத்தி விசாரிச்சேன். பதிலளித்த அந்த அதிகாரி, கூட்டத்துல வழக்கமா 25 தீர்மானங்கள் நிறைவேற்றுவோம். இந்த தடவ, பதினைந்தாவது மானிய நிதிக்குழு நிதியை பயன்படுத்தி பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு, 85 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ள பல பராமரிப்பு பணிகள் பல மாதங்களாக நடக்காம இருந்தது. ஊராட்சி தேர்தல் அறிவிப்பு வர்றதுக்குள்ள, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பணிகளை துவங்கணும்னு, தீர்மானங்கள் கொண்டு வந்திருக்கோம்.
தேர்தல் அறிவிச்சுட்டா கூட்டம் நடக்காது. அதனால், கவுன்சிலில் ஓகே வாங்கிட்டு, டெண்டர் விடுவதற்கு திட்டமிட்டு இருக்கோம். அதனால, கவுன்சிலர்களும் மொத்த தொகையை கணக்கு போட்டுட்டு, இந்த கூட்டத்துக்கு வந்திருக்காங்கனு, ரகசியத்தை 'லீக்' செய்தார்.
ஆளுங்கட்சி நிர்வாகி அட்ராசிட்டி
பொள்ளாச்சி டீக்கடையில் அமர்ந்து, ஆளுங்கட்சி பிரமுகர்கள், கட்சி முக்கிய நிர்வாகி பற்றி பேசிக் கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு அவங்க கிட்ட விசாரித்தோம்.
பொள்ளாச்சி மாகலிங்கபுரம் போலீஸ்காரங்க ஒரு கடையில, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதால் கேஸ் போட்டாங்க. எஸ்.பி., அறிவுறுத்தியவாறு, அக்கடைக்கு 'சீல்' வைக்க, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலருக்கு அறிக்கையும் அனுப்பினாங்க.
உணவு பாதுகாப்பு அலுவலர், அக்கடையை பூட்டி 'சீல்' வைக்கச் சென்றார். அங்கு வந்த எங்க கட்சி முக்கிய நிர்வாகி ஒருத்தரு, 'இது எனது வார்டு; நான் டி.எஸ்.பி.,யிடம் பேசிக்கொள்கிறேன். கடைக்கு சீல் வைக்க வேண்டாம்' என கூறியுள்ளார்.
போலீஸ்ல கேஸ் போட்டிருக்காங்க, கடைக்கு 'சீல்' வைக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினா கடையை திறக்கலாம். அரசு உத்தரவை மீற முடியாதுனு,' எங்காளுகிட்ட பக்குவமா சொல்லியிருக்காங்க.
நாலு பேரு முன்னாடி, தான் சொன்ன மாதிரி அதிகாரி செயல்படாததால, எங்க உடன்பிறப்பு, உடனடியாக நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஒருவரை பஸ் ஸ்டாண்ட்டுக்கு அனுப்பி, அங்குள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு பூட்டு போடுமாறு கூறியிருக்காரு.
அரசாணை பெற்று, நகராட்சி பஸ் ஸ்டாண்டில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு எப்படி சீல் வைக்க முடியும்னு, வருவாய் ஆய்வாளர் 'ஜகா' வாங்கீட்டாருனு, விஷயத்தை சொன்னாங்க.
மனு கொடுத்தாங்க; பட்டா கிடைக்குமா?
உடுமலை தாலுகாவுக்கான ஜமாபந்தி நடந்தது. முதல் மூன்று நாட்கள் குறைந்தளவு மக்கள் கூட்டம் வந்த நிலையில், இறுதி இரு நாட்களில், குடிமங்கலம், பெதப்பம்பட்டி உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தியில், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டம் வந்திருக்கேனு விசாரித்தேன். அப்போது, வீட்டு மனைப்பட்டா கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருப்பது தெரிந்தது.
உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், ஓட்டுக்களை அறுவடை செய்ய, அப்பகுதியில் இருக்கும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், சில புரோக்கர்கள் ஆளும்கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், மனு கொடுக்க மக்களை துாண்டி விட்டிருக்காங்க.
ஒரு சிலர் ஜமாபந்தியில் மனு கொடுத்து, வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக கூறி வசூலும் செய்திருக்காங்க. இத்தனை பேருக்கு, வீட்டு மனை பட்டா வழங்க அரசிடம் ஏது நிலம் என, அதிகாரிகளே அதிர்ச்சியடையும் அளவுக்கு மனுக்கள் வந்திருக்கு.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், இலவச வீட்டு மனை பட்டா வழங்காததே இதற்கு காரணம். அரசே அலட்சியம் காட்டும் போது, நாங்க என்ன செய்ய முடியும்னு, அதிகாரிகள் ஒருவர் உண்மையை சொன்னார்.
எம்.பி., கூட்டத்த புறக்கணித்த தலைவர்கள்
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், மக்கள் பிரநிதிகளின் நடவடிக்கையை அதிகாரிகள் கமென்ட் அடித்து பேசிக்கொண்டிருந்தனர். என்ன நடந்ததுனு விசாரித்தேன்.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமையில் சிறப்பு கூட்டம் நடந்தது. இதுல அனைத்து அரசு துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு பிரச்னைகளை பேசினாங்க.
கூட்டத்துல கலந்துக்க, 34 ஊராட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுத்தோம். ஆனா, ஒரு சில தலைவர்கள் மட்டும் தான் வந்திருந்தாங்க. மத்தவங்க ஏன் வரலைனு கேட்டா, சிலருக்கு வரமுடியாத சூழ்நிலை, சிலர் அ.தி.மு.க., கட்சிக்காரங்க என்பதால கூட்டத்தை புறக்கணிச்சுட்டாங்கனு வந்திருந்த தலைவர்கள் சொன்னாங்க.
பொதுமக்கள் பிரச்னை பத்தி பேசத்தானே வரச்சொன்னோம். இதுல கட்சி எங்க இருந்து வந்துச்சு, கட்சி பிரச்னைல மக்களை மறக்காம இருந்தா சரி.
அரசு அலுவலகங்கள் மக்கள் பிரச்னைகளை பேசும் மன்றங்கள் என்பதை உணர்ந்து, ஊராட்சி தலைவர்கள் வந்திருந்தா, ஊரின் தேவைகள் பற்றி பேசியிருக்கலாம். அனைத்து துறை அதிகாரிகளும் இருக்கும் போது தீர்வு கிடைத்திருக்கும்னு சொன்னாங்க.
வசூலுக்காக போறாங்க 'நைட் ரவுண்ட்ஸ்'
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அப்போது அவர், 'இப்ப, வருவாய் துறை அதிகாரிக அலுவலகத்தில் 'எதுவும்' வாங்குவதில்லை. 'நைட் ரவுண்ட்ஸ்', வெளியில் சம்பந்தப்பட்ட நபரை சந்தித்து, 'கவனிப்பு' பெற்று ஓகே போடும், 'டிரென்ட்' வருவாய்துறையில் பாலோஆப் பண்றாங்க. வழக்கமா போலீஸ்காரங்க தான் இப்படி பண்ணுவாங்க. அவங்கள பாத்து இப்ப இவங்களும் களத்துல குதிச்சுட்டாங்க.
அலுவலகத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்குமாம். அதனால, வசூலுக்கு இப்படி கிளம்பிட்டாங்க. அதிலும், கோபாலபுரம், தாளக்கரை, அனுப்பர்பாளையம் வழியாக கனிம வளங்கள் ஏற்றி வரும் லாரிகளை மடக்கி, 'நைட் ரவுண்ட்ஸ்' என பெயரில், இரு வருவாய்துறை அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு இருக்காங்க.
அவங்க, 'ஆன்லைன்' சான்றிதழ்கள் கூட, 'ரிட்டன்' அனுப்பி, 'கவனிப்பு' பெற்றால் தான் ஓகே போடுறாங்க என, நேர்மையான ஒரு சில அதிகாரிகள் பேசிக்கிறாங்க. பணம் வேணும்னா வருவாய் துறை அதிகாரிக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க, என, விஷயத்தை சொன்னார்.