/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சியால் கருகும் பயிர்கள் இழப்பீடு வழங்க வேண்டுகோள்
/
வறட்சியால் கருகும் பயிர்கள் இழப்பீடு வழங்க வேண்டுகோள்
வறட்சியால் கருகும் பயிர்கள் இழப்பீடு வழங்க வேண்டுகோள்
வறட்சியால் கருகும் பயிர்கள் இழப்பீடு வழங்க வேண்டுகோள்
ADDED : மே 10, 2024 02:04 AM

திருப்பூர்:தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு, வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பருவ மழை பொய்த்துப்போய்விட்டன. பி.ஏ.பி., தொகுப்பணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால், பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில், நீண்ட கால பயிரான தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடும் வறட்சியால் தற்போது, தென்னை மரங்கள் கருகிவருகின்றன. குடிமங்கலம் மற்றும் தாராபுரத்தின் மேற்குப்பகுதிகளில் அதிகளவு தென்னை மரங்கள், வறட்சிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காய்ந்துள்ளன. சோளம் போன்ற தீவன பயிர்கள்; வெங்காயம் உள்பட காய்கறிகளும் கருகியுள்ளன.
கிணறுகளிலும் நீர் மட்டம் சரிந்துள்ளது. வாடல் நோய், காய்ப்புத்திறனும் குறைந்துள்ளது. பல பகுதிகளில், விவசாயிகள், வெயிலுக்கு பாதிக்கும் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வெயிலுக்கு பாதித்த தென்னைமரங்கள், காய்கறி, தீவன பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.
அவிநாசி தாலுகா, கானுார், கருவலுார், சேவூர், எலச்சிபாளையம், தண்டுக்காரன்பாளையம், தத்தனுார், புலிப்பார், பாப்பாங்குளம், தாமரைக்குளம், முறியாண்டம்பாளையம் ஊராட்சி பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே மும்முனை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், பயிர்களுக்கு போதுமான அளவு நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய இணைப்புகளுக்கு சீரான அழுத்தத்தில், மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வெயில்தாக்கம் அதிகரிப்பால், கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 3 மற்றும் ஒன்பதாவது மாதங்களில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். இந்தாண்டு இன்னும் தடுப்பூசி வந்துசேரவில்லை. சிறப்பு முகாம் நடத்தி, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தவேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.