/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நம்பிக்கையுடன் எழுவாயே... உனக்கென சரித்திரம் படைப்பாயே!
/
நம்பிக்கையுடன் எழுவாயே... உனக்கென சரித்திரம் படைப்பாயே!
நம்பிக்கையுடன் எழுவாயே... உனக்கென சரித்திரம் படைப்பாயே!
நம்பிக்கையுடன் எழுவாயே... உனக்கென சரித்திரம் படைப்பாயே!
ADDED : ஆக 28, 2024 11:42 PM

நம்பிக்கை பொங்க விளையாட்டுப்போட்டிகளில் சாதிக்கத் தயாராகும் திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியரை ஊக்குவிக்க, பல்வேறு விளையாட்டுச்சங்கங்கள் உள்ளன. 'விடாமுயற்சியுடன் லட்சியத்துடன் செயல்படும் இளம் வீரர், வீராங்கனைகள், விளையாட்டுத்துறையில் சரித்திரம் படைப்பார்கள்' என்கின்றனர் விளையாட்டுச்சங்கங்களின் நிர்வாகிகள்.
'குகேஷ்'கள் உருவாவாரகளா?
மனோகரன், இணைச்செயலாளர், திருப்பூர் மாவட்ட சதுரங்க சங்கம்:
திருப்பூர் மாவட்டத்தில்,மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்களாக, 25க்கு மேற்பட்ட செஸ் வீரர் - வீராங்கனையர் உள்ளனர். திருப்பூர், நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர், கோகுலகிருஷ்ணன், தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்கும் வீரராக உள்ளார். புதிய சதுரங்க வீரர், வீராங்கனைகளை உருவாக்க மாதம், இரண்டு மாவட்ட போட்டி, அவ்வப்போது மாநில போட்டிகளை தொடர்ந்து நடத்துகிறோம். ஆறு வயது முதல் பங்கேற்பவர்கள் அதிகமாகி வருகின்றனர்.37 ஆண்டுகளாக நம்பர் 1 வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி குகேஷ், தற்போது தேசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளார். உலக அளவில், 100 தரவரிசைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். குகேஷால் பலர் ஈர்க்கப்பட்டு செஸ் பக்கம், 24 ஆண்டுகளுக்கு பின் வர துவங்கியுள்ளனர். பெற்றோர் முன்வந்து சதுரங்கம் விளையாட குழந்தைகளை ஊக்கப்படுத்துகின்றனர்.
விடாமுயற்சியால் தடகள சாதனை
அழகேசன், பயிற்சியாளர், ஐவின் டிராக் அகாடமி:
கடந்த 2016 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தருண் அய்யாசாமியின் பயிற்சியாளராக இருந்துள்ளேன். கடந்த 2014ல் தமிழக அரசின் சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருதும் பெற்றுள்ளேன். கடந்த, 2012 - 2016 வரை தருண் அய்யாசாமி என்னிடம் பயிற்சி பெற்றார். தெற்காசிய போட்டியில், 2 வெள்ளி வென்றார். பின், ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றார். அவருக்கு பின், ஸ்ரீவர்தனி, தெற்காசிய விளையாட்டு தகுதி போட்டியில் பங்கேற்க செல்கிறார். திருப்பூரை பொறுத்தவரை சர்வதேச அளவில் சாதிக்க கூடிய வீரர், வீராங்கனைகள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். விடாமல் அவர்கள் பயிற்சி செய்தால் தான், சாதிக்க முடியும்.
கபடியில் பட்டை தீட்டிய அணிகள்
சபியுல்லா, மாநில செயலாளர், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம்:
தமிழகத்தில் அதிகளவில் கபடி வீரர்கள் உருவாகும் மாவட்டங்களில் திருப்பூரும் முதன்மையானதாக உள்ளது. கிராமங்கள் துவங்கி, வட்டாரங்கள் மற்றும் மாவட்ட அளவில் அதிகளவில் கபடி அணிகள் உள்ளன. ஒரு இடத்தில் போட்டி நடத்துவது தெரிந்தால், உடனடியாக பதிவுக்கு அணிகள் போட்டி போடுகின்றன. 110 ஆண்கள் அணி, 25 பெண்கள் அணி பதிவு செய்து பங்கேற்கின்றன. மாநில அளவிலான போட்டியில் ஆண்களை விட, பெண்கள் அணியே அதிகமாக பங்கேற்கிறது. 'கேலோ இந்தியா', தேசிய கபடி போட்டிகளிலும், திருப்பூர் மாவட்ட கபடி வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஜொலித்து வருகின்றனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் என மூன்று நிலையிலும், மூன்று அணிகளை உருவாக்கி பட்டை தீட்டி வைத்திருக்கும் கிளப், அணி மேலாளர், கேப்டன்கள் திருப்பூரில் உண்டு. திருப்பூர் வீரர்கள் பலர் கபடி விளையாடி, தேசிய போட்டிக்கு பின் தேர்வாகி, போலீஸ், வனத்துறை, தபால்துறை பணிகளில் இணைந்துள்ளனர்.
அதிக 'டாப்' ஷூட்டர்கள்
ஹரிகிருஷ்ணன்,ஆயுட்கால உறுப்பினர், தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம்:
துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மாவட்டத்தில், 25 முதல், 30 வீரர்கள் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்தப்படியாக, தமிழகத்தில் அதிகமான 'டாப் ஷூட்டர்' திருப்பூர் மாவட்டத்தில் தான் உள்ளார். ஆர்வமுள்ளவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்குவதால், துப்பாக்கி சுடுதல் தொடர்பான பயிற்சிகளில் இணைய, போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் அதிகரித்து வருகிறது.
வாலிபாலுடன் நெருங்கிய நகரம்
பழனிசாமி, கவுரவ ஆலோசகர், திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்):
வாலிபாலுக்கும் திருப்பூருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த 1978, 1979, 1980களிலேயே மாநில போட்டியை நடத்திய அனுபவம், தேசிய வீரர்களை திருப்பூர் உருவாக்கியது. மாநில அணிக்கு, தேசிய அணிக்கு வீரர், வீராங்கனை அனுப்பி வைக்கும் ஊராக திருப்பூர் திகழ்ந்தது. தற்போது, திருப்பூர் வித்யவிகாசினி பள்ளி, அசத்தி வருகிறது.
மாநில பீச் வாலிபால் போட்டியில் சிறந்த இடத்தை பிடித்து வருகிறது. வாலிபால் பொறுத்த வரை அணிகள் நிறைய உருவாகிறது. அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. தவிர்க்க இயலாத சில காரணங்களால் அவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு வர முடிவதில்லை. ஒற்றுமையாக இணைந்து ஒரே சேர அனைவரும் விளையாடினால் தான் புள்ளிகளை பெற முடியும் என்பதற்கு வாலிபால் போட்டி ஒரு உதாரணம். வாலிபால் போட்டியில் அதிகளவில் வீரர், வீராங்கனைகள் உருவாக்கி, மாநில, தேசிய போட்டிக்கு அனுப்பி வைக்க தேவையான ஊக்குவிப்புகளை தொடர்ந்து நாங்கள் வழங்கி வருகிறோம்.