ADDED : மார் 08, 2025 11:21 PM

பல்லடம்: பல்லடம் அருகே, வேளாண்துறை சார்பில், வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், மாணிக்காபுரம் கிராமத்தில் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் அமுதா தலைமை வகித்து பேசுகையில், ''விவசாயிகளே விதை உற்பத்தியாளராக மாறி, உற்பத்தி செய்து தரும் விதைகளை நாங்களே பெற்றுக்கொள்கிறோம். இதற்காக, அரசிடமிருந்து விதை உற்பத்தி மானியமும் வழங்கப்படுகிறது. நல்ல விதையாக இருந்தால்தான் விவசாயிகளான நீங்கள் அதை வாங்குவீர்கள்.
இதன் காரணமாகவே, நல்ல விதைகளை உருவாக்கும் முயற்சியாக, விவசாயிகளான உங்களையே விதை உற்பத்தியாளராக பயன்படுத்துகிறோம்.
எனவே, விவசாயிகளான நீங்கள் மக்காச்சோளம், சோளம், பாசிப்பயறு உள்ளிட்ட விதைகளை, வேளாண் துறையிலிருந்து பெற்று, மீண்டும் விதைகளை உற்பத்தி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெற்றுப் பயன்பெற, விவசாயிகள் அனைவரும், விவசாய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்' என்றார்.
விவசாயிகள் கூறியதாவது:
விவசாயத் தொழிலில் ஆட்கள் தேவை அதிகம் உள்ளது. ஆனால்,நுாறு நாள் திட்டத்தின் மூலம் நேரத்தை வீணடித்து வரும் தொழிலாளர்களால், விவசாய தொழிலுக்கு ஆட்களை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் கிராம சபா கூட்டங்களில் பலமுறை தெரிவித்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. காலம் காலமாக விவசாயத் தொழிலில் உள்ளவர்கள் மட்டுமே இதை செய்து வருகின்றனர்.
இன்றைய தலைமுறைகள் விவசாயத்துக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கிடையே, விவசாய பணிகளுக்கு கூலி தொழிலாளர்கள் இன்றி, நம் நாடு மிகப்பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இதை, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உட்பட யாருமே காதில் வாங்க மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.