/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்ணை பரிசோதிக்க மாதிரி சேகரிப்பு! விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கல்
/
மண்ணை பரிசோதிக்க மாதிரி சேகரிப்பு! விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கல்
மண்ணை பரிசோதிக்க மாதிரி சேகரிப்பு! விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கல்
மண்ணை பரிசோதிக்க மாதிரி சேகரிப்பு! விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கல்
ADDED : மே 02, 2024 11:20 PM
உடுமலை:மண் பரிசோதனைக்கு, மண் மாதிரி சேகரிக்கும் முறைகள் குறித்து, கோவை வேளாண் பல்கலை., யின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
அத்துறையினர் விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் வருமாறு:
விளைநிலத்தை பல பகுதிகளாக பிரித்து, தனித்தனியாக மண் மாதிரி சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கும் குப்பை உரங்கள், பூஞ்சாணம் மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக்கூடாது.
இலை, சருகு, புல், செடியை, கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். மாதிரி எடுக்கும் போது, ஆங்கில எழுத்து 'V' போல, மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும்.
பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை 15 செ.மீ., க்கு மேல் அல்லது 23 செ.மீ., வரையும், 2.5 செ.மீ., பருமனில், மாதிரி சேகரிக்க வேண்டும்.
ஒரு ெஹக்டேரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகளை சேகரித்து, மண் ஈரமாக இருந்தால், முதலில், அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால், எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குப்பி வாயிலாக மண் மாதிரி எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் சேகரிக்க வேண்டும். மண் வெட்டி மற்றும் இரும்பு சட்டியை பயன்படுத்தக்கூடாது.
சேகரித்த மாதிரிகளை, பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு, அரை கிலோ மண் மாதிரியை, கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.
வாளியில் சேகரித்த மண் மாதிரியை, சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காக பிரித்து எதிர் முனைகளில் காணப்படும் இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும்.
தேவைப்படும் அரை கிலோ அளவு வரை, இம்முறையினை திரும்ப திரும்ப கையாள வேண்டும். சேகரித்த மண் மாதிரியை, சுத்தமான துணிப்பை அல்லது பாலித்தீன் பையில் போட்டு, அதன் மீது மாதிரியை பற்றிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.
உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்கு அல்லது பைகளை கொண்டு மண் மாதிரிகள் சேகரிக்ககூடாது.
இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.
மண்ணை பரிசோதிப்பதால், எளிதாக நீர், உர நிர்வாகம் செய்து, செலவை குறைப்பதுடன், அதிக விளைச்சல் பெறலாம் எனவும், அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.