/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சதமடிக்கும் வெயில்; வறளும் குளங்கள்: கவலையில் விவசாயிகள்
/
சதமடிக்கும் வெயில்; வறளும் குளங்கள்: கவலையில் விவசாயிகள்
சதமடிக்கும் வெயில்; வறளும் குளங்கள்: கவலையில் விவசாயிகள்
சதமடிக்கும் வெயில்; வறளும் குளங்கள்: கவலையில் விவசாயிகள்
ADDED : மார் 07, 2025 08:15 PM

உடுமலை:
கோடை வெயில் முன்னதாகவே துவங்கி, கொளுத்தி வருவதால், குடிமங்கலம் பகுதியிலுள்ள குளங்கள் வறண்டு, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளுக்கும், உப்பாறு ஓடை மற்றும் கிராமங்களிலுள்ள குளங்களே நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. மழைக்காலங்களில் குறைந்த நீர் வரத்தே இந்த குளங்களுக்கு கிடைக்கிறது.
எனவே, பி.ஏ.பி., பாசனத்தின் போது, தங்கள் மடைக்குரிய பங்களிப்பு தண்ணீரை குளங்களில் விவசாயிகள் நிரப்புகின்றனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும்; கிராம கால்நடைகளுக்கு தேவையான குடிநீரும் கிடைக்கும்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, ஐந்து சுற்றுகள் தண்ணீர் திறக்கப்பட்டது. அதே சீசனில், மழையும் பெய்ததால், பாசனத்துக்கான தண்ணீரை குளங்களில் நிரப்பினர்.
அவ்வகையில், 20க்கும் மேற்பட்ட குளங்கள் முழுமையாக நிரம்பின. இதனால், இந்தாண்டு கோடை சீசனை சமாளித்துக்கொள்ளலாம் என, விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், கோடை வெயில் முன்னதாகவே துவங்கி கொளுத்தி வருவதுடன், வறட்சியான காற்றும் வீசி வருவதால், குளங்களில் நீர் வேகமாக வற்றி வருகிறது. நேற்று பகலில், 39 டிகிரி செல்சியஸ் (102.2 பாரன்ஹீட்) அளவுக்கு வெப்ப நிலையுடன் வறண்ட காற்றும் வீசியது.
விவசாயிகள் கூறியதாவது: குளங்களில் குறைந்த நாட்களிலேயே தண்ணீர் வற்றி, நிலத்தடி நீர் மட்டமும் சரிய துவங்கியுள்ளது. கிராமங்களின் குடிநீர் தேவைக்கு பயன்படும் போர்வெல்களிலும் வரத்து குறைந்து விடும்.
பருவமழை சீசன் துவங்கும் வரை, நிலையை சமாளிப்பது கடினமாகும். வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கென கட்டப்பட்ட தொட்டிகளில், ஊராட்சி நிர்வாகம் வாயிலாக கோடைக்காலத்தில் நீர் நிரப்ப வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.