/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்ன மழைக்கே சின்னாபின்னமானது பாரு... பேரிடர் காலத்தில் பாடம் சொல்லித்தருவது யாரு?
/
சின்ன மழைக்கே சின்னாபின்னமானது பாரு... பேரிடர் காலத்தில் பாடம் சொல்லித்தருவது யாரு?
சின்ன மழைக்கே சின்னாபின்னமானது பாரு... பேரிடர் காலத்தில் பாடம் சொல்லித்தருவது யாரு?
சின்ன மழைக்கே சின்னாபின்னமானது பாரு... பேரிடர் காலத்தில் பாடம் சொல்லித்தருவது யாரு?
ADDED : மே 18, 2024 12:08 AM

- நமது நிருபர் -
கடந்த 13ம் தேதி, இரவு, தனக்கே உரித்தான இயல்பான காலநிலையில் இருந்த அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் கருமேகம் சூழ, மெலிதாய் வீசிய காற்று, சூறைக்காற்றாய் மாறி, சுழற்றி அடித்தது.
வெறும், 20 நிமிடம், சுழன்றடித்த காற்று, மழையில் நிலைகுலைந்தது அவிநாசி.
சாலையோரங்கள், குடியிருப்புகளையொட்டி வளர்ந்திருந்த பல மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின் கம்பிகளை உரசியவாறு இருந்த மரக்கிளைகள், முறித்து மின் கம்பிகளின் மீது விழுந்தன.
அவிநாசி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும், 40க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மரங்கள் விழுந்தன; மரக்கிளைகள் முறிந்தன.
இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட, ஊரே இருளில் மூழ்கியது; இந்த மின்வெட்டு இரவு முழுக்க நீடித்தது; புழுக்கத்தில் மக்கள் புழுவாய் நெளிந்த படியே இரவை நகர்த்தினர். மறுநாள் மாலை தான், பல இடங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இதுவும் ஒரு வகையில் பேரிடர் பாதிப்பு தான். அன்று துவங்கி இன்று வரை, அவ்வப்போதுமின்தடை ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. 'வெறும், 30 நிமிட மழை, காற்றின் பாதிப்பில் இருந்து மீள, பல நாட்கள் தேவைப்படுகிறது' என்பது தான், பேரிடர் மேலாண்மை மீது எழுந்துள்ள கேள்வி.
அதேபோல், நேற்று மதியம் திருப்பூரில் மழை பெய்தது. கன மழையோ, அடாது பெய்த மழையோ அல்ல; சில நிமிடம் பெய்த மிதமான மழை தான். இருந்தாலும், சாலையெங்கும் வெள்ளக்காடாக மாறியது; பல இடங்களில் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.
திட்டமிடல் வேண்டும்!
மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர் சமயத்தில், வருவாய்த்துறை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மருத்துவ மற்றும் சுகாதாரப் பணிகள் துறை, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை என, அனைத்து துறையினரும் களமிறங்க வேண்டும் என்பதுதான், பேரிடர் மேலாண்மை திட்டத்தின் வழிக்காட்டுதல்.
'இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளை இயன்ற வரை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான திட்டமிடல், அதற்கான உபகரணங்கள், பணியாளர்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்' என்பதும், பேரிடர் மேலாண்மை திட்டத்தின் வழிகாட்டுதல்.
ஒருங்கிணைப்பு அவசியம்
அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
மழை, காற்றுக்கு விழும் மரங்கள் எங்கு விழுந்தாலும், வெள்ளம் பெருக்கெடுத்தாலும், அது எந்த துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்றெல்லாம் பார்க்காமல் நெடுஞ்சாலை, தீயணைப்புத்துறை, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி பணியாளர்கள் என, அனைவரும் இணைந்து அங்கு சீரமைப்பு பணி மேற்கொள்ளும் போது, பாதிப்பை சில நிமிடத்தில் சரி செய்து விட முடியும். இதற்கு, துறைகளுக்குள் கண்டிப்பாக ஒருங்கிணைப்பு அவசியம்.
மழை, வெள்ளம், புயல் என, இயற்கை பேரிடரின் பாதிப்பு அதிகம் நிகழும் மலை மாவட்டங்களில் தான், பேரிடர் மேலாண்மை பாடம் அவசியம் என்ற கருத்து தவறு. திருப்பூர் போன்ற சமவெளி பகுதிகளிலும் பேரிடர் மீட்பு செயல்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்; அமல்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் பெரும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, சமாளிப்பது கடினமாகி விடும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

