/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு; அலைமோதும் மக்கள்!
/
ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு; அலைமோதும் மக்கள்!
ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு; அலைமோதும் மக்கள்!
ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு; அலைமோதும் மக்கள்!
ADDED : செப் 17, 2024 04:55 AM

பூட்டிக்கிடக்கும் ஆதார் மையம்
உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில், திறக்கப்படாமல் ஆதார் மையம் பூட்டி கிடக்கிறது. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை நகராட்சியினர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
குடிநீர் தட்டுப்பாடு
உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி மலைப்பகவுண்டர்லே அவுட், அழகுவேல் லே அவுட் பகுதிகளில் குடிநீர் சீராக வினியோகிக்கப்படுவதில்லை. குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதால் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. குறுகிய இடைவெளியில் குடிநீர் சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கட்ராமன், பெரியகோட்டை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை - பொள்ளாச்சி ஒருவழிப்பாதையில், நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து தொடர்ந்து நிறுத்தப்படுகிறது. மாலை நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் உள்ளது. இவ்வாறு நிறுத்தப்படுவதால் மாலையில் போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்து ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மகேஷ், உடுமலை.
பராமரிப்பில்லாத பூங்கா
உடுமலை நகராட்சி ஸ்ரீ நகரில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா பராமரிப்பில்லாததால், குப்பை, நிறைந்து காணப்படுகிறது. இதனால், குழந்தைகள், மக்கள் இதை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, நகராட்சியினர் பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோமு, உடுமலை.
புகையால் பாதிப்பு
உடுமலை, சின்னவீரம்பட்டி ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து புகை பரவுகிறது. வாகன ஓட்டுநர்கள் ரோட்டை கவனிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். புகையால் அவ்வழியாக செல்வோருக்கு சுவாச பிரச்னைகளும் ஏற்படுகிறது.
- கார்த்திகேயன், உடுமலை.
குறுகலான ரோடு
உடுமலை தளி ரோடு ஒன்றிய அலுவலகம் அருகே ரோடு குறுகலாக உள்ளது. அப்பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. பஸ் நிற்கும் நேரங்களில் மற்ற வாகனங்கள் ஒதுங்கி செல்வதற்கு வழியில்லாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- தீபா, போடிபட்டி.
தார் ரோடு மண் ரோடானது!
பொள்ளாச்சி, ஆர்.பொன்னாபுரம் செல்லும் ரோடு சீரமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால், தார் ரோடு மண் ரோடாக மாறிவிட்டது. இதில், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு மழை நீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். சிலர் இவ்வழியை தவிர்த்து வருகின்றனர். இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
- -சூர்யா, பொள்ளாச்சி.
மரக்கிளையால் அச்சம்
கோவில்பாளையத்தில் இருந்து சோழனூர் செல்லும் ரோட்டின் ஓரத்தில் உள்ள, மரத்தின் கிளை முறிந்து காய்ந்த நிலையில் தொங்கிய படி உள்ளது. இந்த மரக்கிளை எப்போது வேண்டுமானாலும் கீழே விழ வாய்ப்புள்ளது. ரோட்டில் செல்லும் வாகனங்களும் அச்சத்துடன் செல்வதால், வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி இந்த மரக்கிளையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ஜீவா, கோவில்பாளையம்.
தடுப்பு அமைக்கணும்!
நெகமத்தில், நாகர் மைதானம் செல்லும் வழியில் கால்வாய் அருகே தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மற்றும் கால்வாயில் அதிகமாக புதர் மண்டி இருக்கிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து, புதரை அகற்றி தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -பூபதி, நெகமம்.
மின்கம்பம் சேதம்
கிணத்துக்கடவு மயானம் செல்லும் வழியில் உள்ள சில மின் கம்பங்களில், கான்கிரீட் உதிர்த்து சேதமடைந்த நிலையில், கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. மக்கள் பாதுகாப்பு கருதி, சேதமடைந்துள்ள இந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -சுரேஷ், கிணத்துக்கடவு.
திறந்தவெளியில் குப்பை
வால்பாறை நகரில், பல இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுவதால், கால்நடைகள் ரோட்டில் கிடக்கும் குப்பையை கிளறுகின்றன. இதனால், ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரோட்டில் குப்பை கொட்டுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -சிவன், வால்பாறை.