/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விரைவில் அடுத்த தேர்தல்?ஊரக உள்ளாட்சிகள் ஆயத்தமாகின்றன
/
விரைவில் அடுத்த தேர்தல்?ஊரக உள்ளாட்சிகள் ஆயத்தமாகின்றன
விரைவில் அடுத்த தேர்தல்?ஊரக உள்ளாட்சிகள் ஆயத்தமாகின்றன
விரைவில் அடுத்த தேர்தல்?ஊரக உள்ளாட்சிகள் ஆயத்தமாகின்றன
ADDED : ஏப் 22, 2024 02:27 AM

திருப்பூர்;பதவிக்காலம் டிச., மாதம் நிறைவு பெறுவதால், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருப்பூர் மாநகராட்சியுடன் மங்கலம், இடுவாய் உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் அங்கும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல், 2019ல் நடந்தது. மாநில அளவிலான 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகள் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இரண்டு கட்டமாக, 2019 டிச., மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. வரும் டிச., மாதத்துடன், ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் நிறைவுபெறுகிறது.
முடிவு என்ன?
லோக்சபா தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். டிச., மாதம் தேர்தல் நடக்க வேண்டுமெனில், அக்., மாதத்தில் இருந்தே, அதற்கான பணிகளை துவக்க வேண்டும். தமிழக அரசு என்ன முடிவெடுக்கும் என்று தெரியாமல், கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
அதாவது, ஊரகம் மற்றும் நகரம் என, தனித்தனியே தேர்தல் நடத்தப்படுமா; இரண்டு ஆண்டுகளுக்கு, ஊரக உள்ளாட்சிகள் தனி அலுவலர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு, மொத்தமாக 2026ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
திருப்பூரில்...
திருப்பூரை பொறுத்தவரை, மாநகராட்சியை ஒட்டியுள்ள, மங்கலம், இடுவாய், முதலிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம் ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சியும் இணைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பார்த்தால், மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகளுக்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா; அப்படியே நடந்தாலும், நகர உள்ளாட்சி தேர்தலின் போது மாநகராட்சியுடன் இணைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
என்னதான் நடக்கும்?
திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு, 13 ஊராட்சி ஒன்றிய குழுக்கள், 265 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்காலம், எட்டு மாதங்களில் முடியப்போகிறது. எனவே, அடுத்த சில மாதங்களில், தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான ஆயத்த பணிகளை துவக்கும். வரும், 2026 சட்டசபை தேர்தலின் போது, உள்ளாட்சி பிரதிநிதிகளின் தேர்தல் பணி அத்தியாவசியமானது. அதற்கேற்ப தமிழக அரசும் முடிவு செய்யுமென, அரசியல் கட்சி யினர் அனைவரும் காத்திருக்கின்றனர்.

