/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனப்பகுதியில் வேக கட்டுப்பாடு தேவை எச்சரிக்கை தகவல் பலகை அமைக்கணும்
/
வனப்பகுதியில் வேக கட்டுப்பாடு தேவை எச்சரிக்கை தகவல் பலகை அமைக்கணும்
வனப்பகுதியில் வேக கட்டுப்பாடு தேவை எச்சரிக்கை தகவல் பலகை அமைக்கணும்
வனப்பகுதியில் வேக கட்டுப்பாடு தேவை எச்சரிக்கை தகவல் பலகை அமைக்கணும்
ADDED : டிச 27, 2024 10:59 PM
உடுமலை;  சின்னாறு, அமராவதி அணை, திருமூர்த்திமலை உள்ளிட்ட ரோடுகளில், அரிய வகை உயிரினங்களின் பாதுகாப்புக்காக, வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு குறித்த எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டுமென, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை, அமராவதி வனச்சரக பகுதி வழியாக, சின்னாறு மற்றும் திருமூர்த்திமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கான ரோடு அமைந்துள்ளது. அணை, வனம் என ஒருங்கே அமைந்துள்ள இப்பகுதிகளில், வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுத்தேவைக்காக அணைப்பகுதிக்கு வந்து செல்கின்றன.
திருமூர்த்திமலை பகுதியில், காண்டூர் கால்வாயில் இருந்து, படகுதுறை வரையிலான பகுதியில், பல்வேறு வனவிலங்குகள், பகலில் நேரத்திலும் ரோட்டை கடந்து அணைப்பகுதிக்கு வருகின்றன.
இதே போல், சின்னாறு ரோட்டில் பல இடங்களிலும், அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் செல்லும் ரோட்டிலும், விலங்குகள் ரோட்டை கடக்கின்றன.
இவ்வாறு, வனவிலங்குகள் அப்பகுதியில், ரோட்டை கடப்பது குறித்து, எவ்வித அறிவிப்பு பலகையும், வனத்துறையினரால் வைக்கப்படவில்லை. இதனால், அதிவேகமாக அப்பகுதியை கடக்கும் வாகனங்களில் அடிபட்டு, வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'சின்னாறு, அமராவதி, திருமூர்த்திமலை உள்ளிட்ட இடங்களில், வனவிலங்குகள் ரோட்டை கடக்கும் பகுதியில், வேகக்கட்டுப்பாடு முறைகளை அமல்படுத்த வேண்டும்.
வனவிலங்குகள் ரோட்டை கடக்கும் இடத்தில், எச்சரிக்கை தகவல் பலகை வைக்க வேண்டும். அங்கு வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் குறித்தும் குறிப்பிட்டு, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.

