/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அருள் மழை பொழிகிறார் ஸ்ரீவரதராஜப்பெருமாள்
/
அருள் மழை பொழிகிறார் ஸ்ரீவரதராஜப்பெருமாள்
ADDED : ஜூலை 12, 2024 12:24 AM

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில், சோமனுார் - மங்கலம் ரோட்டில், ஸ்ரீ பூமி நீளாதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. சோளீஸ்வரர் கோவில் அருகே ராஜவாய்க்கால் மற்றும் நொய்யல் ஆற்றின் தென் கரை இரண்டுக்கும் இடையில் இக்கோவில் அமைந்துள்ளது.
கொங்கு நாட்டில் திருமால் கோவில்கள் 'திருமேற்கோவில்', 'மேலைத்திருப்பதி' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக திருமால் கோவில்களை விண்ணகரங்கள் என்று அழைப்பது வழக்கம். தற்போது இக்கோவில் வரதராஜப் பெருமாள் பெயரில் அழைக்கப்பட்டாலும், கோவில் குறித்த கல்வெட்டுகளில், 'அருளாளநாதப் பெருமாள்', 'அல்லாளநாதப் பெருமாள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கும் அருளாளப் பெருமாள் என்ற பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவில் வெளிப்புறம்தீபஸ்தம்பம்
கொங்கு நாட்டு முறைப்படி தீபஸ்தம்பம் கோவிலுக்கு வெளிப்புறம் அமைந்துள்ளது. கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என்ற அமைப்பில் உள்ளது. வைகுண்ட ஏகாதசி, தீபாவளி, புத்தாண்டு பிறப்பு போன்ற பல விழாக்கள் இக்கோவிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மந்திரமலையை ஏந்தி நின்ற கருடாழ்வார்
கோவிலுக்கு வெளியே உள்ள தீபஸ்தம்பத்தின் மேற்குப் பக்கமும், கோவிலுக்கு உள்ளே உள்ள முன் மண்டபமான வசந்த மண்டபத்திலும் கருடாழ்வார் உருவம் உள்ளது. காசிப முனிவருக்கும் விநதை என்ற அவரது மனைவிக்கும் மகனாகப் பிறந்தவர் கருடன்.
கருடன் தேவலோகம் சென்று தேவர்களுடன் போராடி அமிர்தம் கொண்டு வந்தார். அமிர்தத்தோடு தர்ப்பைப் புல்லையும் உலகுக்குக் கொண்டு வந்தார். அமிர்தத்தோடு வந்ததால் தர்ப்பை புனிதமும், துாய்மையும் அடைந்தது என்பர்.
இவரது சிற்றன்னையின் மக்கள் பாம்பு; ஆகையால் இவர் பாம்பின் பகைவராக ஆனார் என்பர். இவருக்குரிய வடமொழிப் பெயர் அனைத்தும் 'பாம்பின் பகைவர்' என்ற பொருள்படும் வகையில் உள்ளது. ரிக் வேதம் கருடனைச் சூரியன் படைத்தார் என்று கூறுகிறது.
இவர் பறவை இனங்களுக்கு தலைவர். திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றில் புள்ளாக ஏறும் கள்வர் என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது.
தேவர்கள் பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுத்தபோது திருமால் வேண்டிக் கொள்ள மந்திரமலையை ஏந்தி நின்றவர் கருடன். ராம - ராவணன் போரில் லட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்த போது வந்து காப்பாற்றியவர் கருடன். வைகுண்டத்திலிருந்து 'கிரீடாசலம்' என்ற மலையைக் கொண்டு வந்து பூமியில் நிறுவியவர் கருடன். அதுதான் இன்றைய திருப்பதி மலையாகும்.
பதினெண் புராணங்களில் கருடபுராணமும் ஒன்று. 'கருட நுால்' என்றோர் இலக்கியமும் உண்டு. இவருடைய சிறந்த வலிமையைக் கண்டு இவரை வாகனமாகவும், கொடியாகவும் திருமால் அமைத்துக் கொண்டார்.
திருமாலுக்கு ஆஞ்சநேயரும் வாகனம். வைணவ மரபில் கருடனைப் 'பெரிய திருவடி' என்றும், ஆஞ்சநேயரைச் 'சிறிய திருவடி' என்றும் குறிப்பிடுகின்றனர். இவரது சிறப்பு காரணமாக 'கருடாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார். திருவரங்கத்தில் கருட மண்டபம் என்று ஒரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதும், வைணவ அடியார் ஒருவர் 'கருட வாகன பட்டர் ' என்ற பெயரில் அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கருட பஞ்சமி
இது சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன்மார், சகோதரர்கள் நலம் வேண்டி கருடனை நோக்கிச் செய்யும் வழிபாடாகும். ஆவணி மாதம் வளர்பிறை ஐந்தாம் நாளாகிய பஞ்சமியன்று கொண்டாடும் நோன்பாகும். ஒரு அரச குமாரி பாம்பு கடித்து இறந்த தனது ஏழு சகோதரர்களையும் புற்று மண்ணை நீரில் கரைத்து இறைத்து உயிர் பெறச் செய்தது இந்த நாளாகும்.

