/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடுக்கி விழு... திரும்ப எழு... பிழை கிடையாது! புதிய மாற்றம் உருவாக்க இளைஞர் சக்தி அவசியம்
/
தடுக்கி விழு... திரும்ப எழு... பிழை கிடையாது! புதிய மாற்றம் உருவாக்க இளைஞர் சக்தி அவசியம்
தடுக்கி விழு... திரும்ப எழு... பிழை கிடையாது! புதிய மாற்றம் உருவாக்க இளைஞர் சக்தி அவசியம்
தடுக்கி விழு... திரும்ப எழு... பிழை கிடையாது! புதிய மாற்றம் உருவாக்க இளைஞர் சக்தி அவசியம்
ADDED : செப் 01, 2024 11:59 PM
திருப்பூர்;'டாலர் சிட்டி' என்று கொண்டாடப்படும் திருப்பூர் பனியன் தொழில் நகரம், மூன்று தலைமுறைகளை கடந்து வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பல்லடம் தாலுகாவின், ஒரு வருவாய் கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாவட்ட தலைநகராக உயர்ந்திருக்கிறது.
திருப்பூரின் அபார வளர்ச்சிக்கு காரணம், தொழிலாளர்களின் அயராத உழைப்பும், அள்ள அள்ள குறையாத, அட்சய பாத்திரமாக 'அருள்பாலிக்கும்' திருப்பூர் பனியன் தொழிலும் தான். ஏறத்தாழ, திருப்பூர் பனியன் தொழிலுக்கு வயது, 50 ஆண்டுகளை கடந்துவிட்டது.
ஒவ்வொரு பத்தாண்டுகள் இடைவெளியில், பின்னலாடை தொழில் புதிய சவால்களை சந்திப்பதும், அதிலிருந்து தாவிக்குதித்து முன்னேறுவதும் வழக்கம். நவநாகரீக தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகம் இன்று உள்ளங்கைக்குள் அடக்கமாகிவிட்டது. விரல் நுனியில், தகவல்கள் குவிக்கப்படுகின்றன.
மாற்றம் முக்கியம்
இன்றைய தொழில் நடைமுறையும், மக்களின் வாழ்க்கை முறையும் மாற்றத்தில் இருந்து தப்பவில்லை; அதன்படி, ஒவ்வொரு தொழில்களும் மாறித்தான் ஆக வேண்டும்; வாடிக்கையாளராகிய, மக்களின் மன ஓட்டங்களை உணர்ந்து, தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பின்னலாடைகளை வழங்கினால் மட்டுமே, வெற்றிக்கனி திருப்பூர் வசம் நீடித்து நிலைத்திருக்கும்.
ஆகமொத்தம், திருப்பூர் பனியன் தொழிலுக்கும் புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய காலம் கனிந்துவிட்டது. புதிய தொழில்முனைவோர் உருவாவது அதிகரித்துள்ளது. பாரம்பரியமாக பனியன் தொழில் செய்து வந்த குடும்பங்களின் வாரிசுகளும், தொழிலில் குதிக்க வேண்டும்.புதிய கோணத்துடன் சிந்திக்கும் இளைஞர் சக்தியும் இணையும் போதுதான், பனியன் தொழில் பெருமை குன்றாது கீர்த்தியுடன் இருக்கும்.
தாய் சங்கமான சைமா, தலை மகனாக இருக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உட்பட, அனைத்து சங்கங்களும், இளம் தொழில் முனைவோருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. மூத்தோர் வழிநடத்தினாலும், இளம் தொழில்முனைவோர் ஒரு குழுவாக இணைந்து, உறுதுணை செய்ய வேண்டுமென, அனைவரும் விரும்புகின்றனர்.
'புது ரத்தம்' பாய்ச்சணும்
தந்தை அல்லது குடும்பத்தினர் தொழிலை வழிநடத்துவர் என்று ஓரமாக நிற்க வேண்டாம்; ஓடிக்கொண்டே இருந்தாலும், தொழிலுக்கு புது ரத்தம் பாய்ச்சினால் மட்டுமே, வளர்ச்சி இலக்கை அடைய முடியும்.
தொழில்முனைவு சற்று சிரமமானதுதான். ஆனால், முனைந்தால் முடியாதது எதுவும் இல்லை. தோல்வியால் தடுக்கி விழத்தான் செய்வோம்; ஆனால், திரும்பவும் எழ முடியும். அதில் ஒன்றும் பிழை இல்லை. ஆனால், ஒருநாள் வெற்றி நிச்சயம்.
எனவே, இளம் தொழில் முனைவோர்கள், பனியன் தொழிலில் அணிவகுக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்று, தங்களின் புதிய சிந்தனைகளை பகிர்ந்தும், புதிய தொழில்நுட்பத்தை புகுத்தியும், பனியன் தொழில் என்ற திருப்பூரின் அட்சயபாத்திரத்தை அரணாக இருந்து காக்க வேண்டும்... காலம் உருண்டோடினாலும் வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர், பின்னலாடை தொழிலின் தலைநகரம் என்ற அந்தஸ்தை தொடர்ந்து தக்கவைக்க வேண்டும்!