ADDED : பிப் 26, 2025 11:44 PM
திருப்பூர்: தெருநாய்களை கட்டுப்படுத்த ஏதுவாக, உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக விரைவில் கணக்கெடுப்பு நடத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
காங்கயம், தாராபுரம் தாலுகா மற்றும் ஈரோடு மாவட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள தெருநாய் பிரச்னை, மாநில அளவிலான பிரச்னையாக மாறியுள்ளது. ஆடு வளர்ப்பை நம்பி வாழும் விவசாயிகள், தெருநாய் தாக்கி ஆடுகள் பலியாவதால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
நாளுக்கு நாள் தெருநாய் தாக்குதலால் ஆடுகள் பலியாவது தொடர் கதையாகிவிட்டது. மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தும், இதுநாள் வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. தெருநாய் பிரச்னைகளை தடுக்கும் வகையில், விவசாயிகள் அச்சத்தை போக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, மாவட்டம் முழுவதும், தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியை துவக்க ஆலோசனை துவங்கியுள்ளது.
திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று, ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் முன்னிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கால்நடைத்துறை துணை இயக்குனர் பிரகாசம், வருவாய்த்துறை, வேளாண்துறை, பொதுப்பணித்துறை உட்பட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்,'தெருநாய் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக, தாலுகா தோறும், தெருநாய் கணக்கெடுப்பு பணி துவங்க உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். அடுத்ததாக, வீட்டு நாய்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து, 'லைசென்ஸ்' வழங்கப்படும்; வளர்ப்பு நாய்களுக்கு, முறையான தடுப்பூசி செலுத்தியது உறுதி செய்யப்படும். தெருநாய் கணக்கெடுப்பு நடத்திய பிறகு, அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை துவங்கும்,' என்றனர்.

