/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்கள் அதிகளவில் குடிநீர் அருந்த அறிவுரை
/
மாணவர்கள் அதிகளவில் குடிநீர் அருந்த அறிவுரை
ADDED : பிப் 21, 2025 10:59 PM
உடுமலை; பள்ளிகளில், துாய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதி இருப்பதற்கு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வீட்டிலிருந்து கொண்டுவரும் குடிநீரை முழுவதும் குடிக்காமல், மீண்டும் வீட்டிற்கு எடுத்துசெல்வதாகவும், பள்ளிகளில் குடிநீர் அருந்துவதற்கு அனுமதி அளிப்பதில்லை, சுகாதாரமான கழிப்பறை இல்லை என மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சீரான, துாய்மையான குடிநீர் இருப்பதையும், மாணவர்கள் போதுமான அளவு குடிநீர் அருந்துவதற்கும், கழிப்பறைகளை துாய்மையாக பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கோடை துவங்க உள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தேவையான அளவு குடிநீர் எடுத்துக்கொள்வதற்கு இறைவணக்க கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

