/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்கள் விளையாட்டிலும் சிறக்கணும்: முகாமில் நீதிபதி அறிவுரை
/
மாணவர்கள் விளையாட்டிலும் சிறக்கணும்: முகாமில் நீதிபதி அறிவுரை
மாணவர்கள் விளையாட்டிலும் சிறக்கணும்: முகாமில் நீதிபதி அறிவுரை
மாணவர்கள் விளையாட்டிலும் சிறக்கணும்: முகாமில் நீதிபதி அறிவுரை
ADDED : ஆக 03, 2024 05:55 AM
உடுமலை: மாணவர்கள் கல்வியை தவிர, விளையாட்டு, ஓவியம், நடனம், தற்காப்பு போன்ற கூடுதல் கலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும், என விழிப்புணர்வு முகாமில் நீதிபதி விஜயகுமார் பேசினார்.
மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், கணியூர், ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகளின் பாதுகாப்பு, போக்சோ சட்டம், புகையிலை, போதைப்பொருள், தடுப்பு மற்றும் அடிப்படைச்சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமில், மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி விஜயகுமார் பேசியதாவது:
குழந்தைகள், சமூகத்தில் தங்களைச்சுற்றி நடக்கும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
சினிமாவில், காட்டப்படும் கதை மற்றும் காட்சி அமைப்புகளில், நன்மை, தீமைகளைப் பிரித்துப்பார்த்து, நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தீயவைகளை புறக்கணியுங்கள். புகையிலை போன்ற போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட வேண்டாம். 18 வயது ஆகாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும் வாகனங்களை இயக்கக்கூடாது.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்கு செல்லும் எண்ணம் இருக்கக்கூடாது. இளம் வயதில் பொறுப்புகளை சுமப்பது, மனதளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சமூகத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனே '1098' என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
மனதளவில் எதேனும் பிரச்னை ஏற்பட்டால், பள்ளிக்கு வருகை தரும் உளவியல் ஆலோசகரின் உதவியை நாடலாம்.
மாணவர்கள், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதித்து நடப்பதோடு, நன்கு படித்து நற்பெயர் பெற வேண்டும். விளையாட்டு, ஓவியம், நடனம், தற்காப்பு போன்ற கூடுதல் கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை தவிர, வேறு யாரும் உங்களின் நலன் மீது அக்கறை செலுத்த முடியாது. இவ்வாறு, நீதிபதி பேசினார்.
முகாமில், கணியூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., சக்திவேல், பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், முதுகலை ஆசிரியர் சரவண குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.