/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரை குளிர்வித்த திடீர் மழை
/
திருப்பூரை குளிர்வித்த திடீர் மழை
ADDED : மார் 12, 2025 12:26 AM

திருப்பூர்; திருப்பூர் நகர பகுதிகளில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
கோடை காலம் துவங்கவுள்ள நிலையில், திருப்பூர் நகர பகுதிகளில், இம்மாத துவக்கம் முதலே வெயில் வாட்டிவருகிறது.
காலை, 6:30 மணி முதலே எட்டிப்பார்க்கும் வெயில் தாக்கம் நேரம் செல்லச்செல்ல அதிகரித்து, மதியம், 12:00 மணிக்கு உச்சம் பெறுகிறது. மாலை வரை வெயில் வாட்டும்நிலையில், இரவு வேளைகளிலும் உஷ்ணமான சீதோஷ்ண நிலையே நிலவுகிறது.
வழக்கம்போல் நேற்றும் பகல் வேளையில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதியம் முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 3:30 மணியளவில் லேசான துாறலுடன் துவங்கி, நேரம் செல்லச்செல்ல கன மழையாக பெய்தது.
திடீர் மழையால், டூவீலர் வாகன ஓட்டிகள் மழையில் தொப்பலாக நனைந்தபடியே சென்றனர். திருப்பூர் - தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு உள்பட பிரதான சாலைகள் மட்டுமின்றி அனைத்து ரோடுகள், சாக்கடை கால்வாய்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாலை, 4:30 மணி வரை மழை நீடித்ததால், பள்ளி மாணவ, மாணவியர் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. மாணவ, மாணவியர், மழையில் நனைந்தபடியும், அரைமணிநேரம் வரை பள்ளியிலேயே காத்திருந்து மழை நின்றபின்னர் வீடுதிரும்பினர். பெற்றோர் பலரும், குடை, ஜர்கின் எடுத்துவந்து தங்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துச்சென்றனர். சுள்ளென சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில், நேற்று திடீரென பெய்த மழையால், திருப்பூர் குளிர்ச்சி அடைந்துள்ளது; மக்கள் மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.