/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டையில் திடீரென நீர்மட்டம் உயர்வு
/
குட்டையில் திடீரென நீர்மட்டம் உயர்வு
ADDED : பிப் 15, 2025 07:06 AM

பல்லடம்; பல்லடம் அருகே, பாச்சாங்காட்டுபாளையம் குட்டையில், நீர்மட்டம் திடீரென உயர்ந்ததற்கு சாயக்கழிவு நீர் கலக்கப்பட்டது காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல்லடத்தை அடுத்த அருள்புரம் - பாச்சாங்காட்டுபாளையம் பகுதியில், நீர் ஆதார குட்டை உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு இக்குட்டை நீர் ஆதாரமாக உள்ளது. விவசாயம் மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, மீன் பிடிப்பு உள்ளிட்டவற்றிற்கும் இக்குட்டை பயன் படுத்தப்பட்டு வருகிறது. கோடை காலம் நெருங்கிவரும் நிலையில், குட்டையில் இருப்பில் இருந்த தண்ணீர் வெகுவாக குறைந்து வந்தது. இதற்கிடையே, திடீரென குட்டையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இப்பகுதியில், ஏராளமான சாய ஆலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள சில சாய ஆலைகளில் இருந்து முறைகேடாக சாயக்கழிவு நீர் வெளியேற்றப் படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இவ்வாறு, திடீரென குட்டையில் நீர்மட்டம் உயர்ந்ததற்கு, முறைகேடாக சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டது தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஏற்ப, குட்டையின் நீர் அடர் பழுப்பு நிறத்தில் நிறம் மாறியுள்ளது. இதனால், விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, முறைகேடாக சாயக்கழிவு நீர் வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

