ADDED : ஏப் 24, 2024 11:15 PM

திருப்பூர்: வெயில் தாக்கம் காரணமாக திருப்பூரில் சாலையோரங்களில் இளநீர், பதநீர், நுங்கு, தர்ப்பூசணி, கம்மங்கூழ், நீர் மோர் போன்றவை விற்பனை செய்யும் தற்காலிக கடைகள் அதிகரித்துள்ளன.
இளநீர் விற்க நிரந்தர கடைகள் மட்டுமின்றி, தற்காலிக கடைகள், சரக்கு ஆட்டோக்களில் கொண்டு வந்து விற்பனை செய்வதற்காக 60 முதல் 80 வரை காணப்படும்.பல்லடம் ரோட்டில் பல்லடம், பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து வரும் இளநீர் வகைகள் விற்பனையாகும்.
அவிநாசி ரோட்டில் அவிநாசி சுற்றுப்பகுதியிலிருந்து வரும் வியாபாரிகள், பி.என்., ரோட்டில் கோபி சுற்றுப்பகுதியிலிருந்து வரும் வியாபாரிகளும் இளநீர் விற்று வருகின்றனர்.
நேரடியாக தோப்புகளில் இருந்து இளநீர் எடுத்து வரும் வியாபாரிகள் ஒரு சிலர் உள்ளனர். இவர்கள் தவிர பெரும்பாலான கடைக்காரர்கள், மொத்த விற்பனை வியாபாரிகளிடமிருந்து தான் இளநீர் வாங்கி வைத்து விற்கின்றனர்.
இந்த வியாபாரிகள் காலையில், பெரிய வேன்கள் மூலம் இளநீர் லோடு கொண்டு வந்து, பகுதி வாரியாக ரோட்டோரம் உள்ள வியாபாரிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் இளநீர் கொடுத்துச் செல்வர். பின் மாலை நேரம் அதற்கான தொகையை வந்து பெற்றுச் செல்வர்.
நேற்று திருப்பூர் நகரப் பகுதியில் இது போல் காணப்படும் இளநீர் கடைகள் ஒன்று கூட காணப்படவில்லை. நொய்யல் கரையில் காணப்படும் நான்குக்கும் குறையாத சரக்கு ஆட்டோக்களுக்குப் பதிலாக ஒரு ஆட்டோ மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான இளநீருடன் இருந்தது. பிரதான ரோடுகளிலும் ஒரு ஆட்டோ தவிர வேறு வாகனங்கள் இல்லை. நகரில் நிரந்தரமாக இளநீர் விற்பனை செய்யும் கடைகள் கூட திறக்கப்படவில்லை.
திருப்பூரில் இளநீருக்கு நேற்று தட்டுப்பாடு நிலவியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

