/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை தினமான ஞாயிறு; 'ஷாப்பிங்' பாதிப்பு
/
மழை தினமான ஞாயிறு; 'ஷாப்பிங்' பாதிப்பு
ADDED : ஆக 18, 2024 11:25 PM

திருப்பூர்:திருப்பூரில் நேற்று மாலை பெய்த மழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
திருப்பூரில் சில நாட்களாக, அவ்வப்போது திடீர் மழை பெய்துவருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை, வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை, 4:28 மணிக்கு, சடசடவென மழை பெய்யத்துவங்கியது. 5:00 மணி வரையிலான அரை மணி நேரத்துக்கு, பலத்த மழை பெய்தது.
திடீரென பெய்த மழையால், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே ரோட்டோர கடைகளில் தஞ்சமடைந்தனர். ஈஸ்வரன் கோவில் வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி, சக்தி தியேட்டர் பகுதிகளில், ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூரில், 'சண்டே ஷாப்பிங்' முக்கியமானதாக உள்ளது. பெரிய, சிறிய ஜவுளி, பர்னிச்சர், மொபைல் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மட்டுமின்றி, குறு சிறு வர்த்தகர்களின் ரோட்டோர தற்காலிக கடைகளிலும், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்துகாணப்படும். காதர்பேட்டையில் உள்ள மொத்த, சில்லரை ஆடை விற்பனை கடைகளில், ஆடை வர்த்தகம் களை கட்டும்.
கடந்த 11ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:00 மணி முதல் மழை பெய்தது. வார விடுமுறைநாளான நேற்றும் மாலை நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக சண்டே ஷாப்பிங் முடங்கியதால், வர்த்தகர்கள் முகம்வாடினர்.
கடைகளில் புகுந்த நீர்
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய மழை பெய்தாலும்கூட, மழை நீர் பெருக்கெடுத்து, அருகிலுள்ள கடைகளுக்குள் சென்றுவிடுகிறது. நேற்று சாக்கடை கழிவுநீர் பொங்கி, அப்பகுதியில் உள்ள நகைக்கடை, ஜவுளி கடைகளுக்கு புகுந்து, பாதிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்த பயனுமில்லை என, வர்த்தகர்கள் புலம்புகின்றனர்.
---
திருப்பூர் ராஜீவ் நகரில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.