/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவனத்தில் கொள்க! ஆவணமின்றி வர்த்தகம் செய்தால் ஆபத்து; ஆடை உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தல்
/
கவனத்தில் கொள்க! ஆவணமின்றி வர்த்தகம் செய்தால் ஆபத்து; ஆடை உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தல்
கவனத்தில் கொள்க! ஆவணமின்றி வர்த்தகம் செய்தால் ஆபத்து; ஆடை உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தல்
கவனத்தில் கொள்க! ஆவணமின்றி வர்த்தகம் செய்தால் ஆபத்து; ஆடை உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஆக 01, 2024 01:38 AM

திருப்பூர் : 'வர்த்தகர்களுக்கு கடனுக்கு ஆடை தயாரித்துக்கொடுக்கும் நிறுவனங்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; உரிய ஆவணங்களுடன் வர்த்தகம் மேற்கொள்வது மிகவும் அவசியம்' என, கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
பின்னலாடை உற்பத்தி துறையினருக்கு வழிகாட்டும் வகையில், 'சைமா' சார்பில், 'பிஸினஸ் பேசலாம் வாங்க' 3வது அமர்வில், 'பாதுகாப்பான தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டும் சட்ட ஆலோசனைகள்' தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
'சைமா' தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். துணை தலைவர் கோவிந்தப்பன் வரவேற்றார். துணை தலைவர் பாலச்சந்திரன் முன்னிலைவகித்தார். 'சைபர்' கிரைம் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி, எஸ்.ஐ., ரபீக் ஆகியோர், 'சைபர்' குற்றங்கள் குறித்தும், அதில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினர்.
கருத்தரங்கில், வக்கீல் ராஜசேகரன் பேசியதாவது:
ஆரம்ப காலங்களில், ஒரு வர்த்தகர் ஆடை தயாரித்துத்தரக் கேட்டால், நம் முன்னோர், அந்த வர்த்தகர்களின் பின்புலத்தை பலவகைகளில் அலசி ஆராய்ந்து, நம்பகமானவர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே, ஆடை தயாரித்துக் கொடுத்தனர்.
ஆனால், இப்போது பெரும்பாலான நிறுவனங்கள், ஆர்டர் கிடைத்தால் சரி என்கிற நிலையில், வர்த்தகர்களின் பின்புலத்தை ஆராயாமல் ஆடை தயாரித்துக்கொடுத்து விடுகின்றனர். இதனால், தொகை கொடுக்காமல் ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது.
எனவே, ஒவ்வொரு ஆடை தயாரிப்பு ஆர்டரையும், மிக கவனமாக பெறவேண்டும். கடனுக்கு ஆடை தயாரிக்கும்போது, எதிர்கால பிரச்னைகளை கருத்தில் கொண்டு, உரிய ஒப்பந்தம் மேற்கொள்வது என சட்ட ரீதியான வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
சில வர்த்தகர்கள், தங்களது நிறுவன கணக்கிற்கு பதில், வேறு நபர்களின் வங்கி கணக்கிலிருந்து, ஆடை தயாரிப்புக்கான முன்பணம் அனுப்பி வைப்பர். எப்படியோ முன்பணம் வந்துவிட்டது, ஆடை தயாரித்து அனுப்புவோம் என நினைக்க கூடாது. குறிப்பிட்ட வர்த்தகரின் நிறுவன கணக்கிலிருந்து தொகை செலுத்தக் கோரவேண்டும்.
'செக்' விஷயத்தில், வர்த்தகரின் ஜி.எஸ்.டி., பதிவு எண் இடம் பெற்றுள்ளதா, அது சரிதானா என பரிசோதிப்பது அவசியம். உரிய ஆவணங்கள் கைவசம் இருந்தால் மட்டுமே, சட்டரீதியாக போராடி, தொகையை பெற முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.