ADDED : மே 11, 2024 12:10 AM
பல்லடம்;பல்லடம் தாலுகா ஆபீஸ் பஸ் நிறுத்தம் மற்றும் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல்லடம் வட்டாரத்தில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பட்டா மாறுதல், நில அளவை, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் உதவி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, பொதுமக்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தை நாடுகின்றனர்.
இவ்வாறு, வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பலரும் பல்வேறு பணிகளுக்காக அன்றாடம் தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர்.
பல்லடம் தாலுகா அலுவலகம், பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரை கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளதால், வட்டாரத்துக்குட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், அரை கிலோமீட்டர் நடந்தே வரவேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்டில் இருந்து தாலுகா ஆபீஸ் வருவதற்கு, வயதானவர்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், ஆட்டோவில் வருவதானால் 100 ரூபாய் செலவாகும். சாதாரண மக்களுக்கு இது வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது.
இதனால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்தே வரவேண்டிய நிலை உள்ளது. இதேபோல், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டில் இருந்து பஸ்களில் வருபவர்களும் பஸ் ஸ்டாண்ட் வந்த பின் தான் தாலுகா அலுவலகம் செல்லும் நிலை உள்ளது.
எனவே, தாலுகா அலுவலகத்தை பஸ் நிறுத்தமாக கொண்டு வருவதுடன், இப்பகுதியில் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி ரோட்டில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், இதற்குள், தாலுகா ஆபீஸ் அருகே, நிழற்குடை அமைக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்.
தாலுகா ஆபீஸ் பஸ் நிறுத்தத்தை ஏற்படுத்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.