/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு சந்தை அமைக்க முயலும் தமிழக அரசு': தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு
/
'வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு சந்தை அமைக்க முயலும் தமிழக அரசு': தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு
'வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு சந்தை அமைக்க முயலும் தமிழக அரசு': தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு
'வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு சந்தை அமைக்க முயலும் தமிழக அரசு': தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு
ADDED : மார் 06, 2025 06:49 AM

பல்லடம்: ''உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தியை ஊக்கப்படுத்தாத தமிழக அரசு, வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு, தமிழகத்தில் சந்தை அமைக்க முயற்சித்து வருகிறது' என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
தமிழக அரசு, வேளாண் விற்பனை குழுக்கள் வாயிலாக, 40க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, ஒரு சதவீத 'செஸ்' விதித்து வருகிறது. இதில், மக்காச்சோளமும் அடங்கும். கோவை, திருப்பூர், ஈரோடு, நாகை மாவட்டங்களில், ஒரு சதவீத செஸ் வசூலிப்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, கூடுதலாக, 18 மாவட்டங்களில் உற்பத்தியாகி விற்கப்படும் மக்காச்சோளத்துக்கு, ஒரு சதவீத 'செஸ்' அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாகை மாவட்ட விவசாயிகள், 'செஸ்' நீக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வேளாண் விற்பனை குழுக்கள் செயல்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகள், விளை நிலங்களில் இருந்து வியாபாரிகளுக்கு நேரடியாக விற்கும் பொருட்களுக்கு 'செஸ்' ஏற்புடையது அல்ல. இது விவசாயிகளுக்கு எதிரானதாகும். விவசாயிகளிடமிருந்து நேரடியாக மக்காச்சோளம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், 'செஸ்' உட்பட, வண்டி வாடகை ஆகியவற்றை விவசாயிகளிடம் கழித்து பணத்தை கொடுப்பதால், விவசாயிகளின் வருமானம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, செஸ் என்பது, விற்பனை குழுக்கள் அமைந்துள்ள வளாகத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு மட்டும் வசூல் செய்யலாம் என்பதே சரியானது.
தமிழக அரசே பொறுப்பு
விளைநிலங்களில் இருந்து, விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் மக்காச்சோளத்துக்கு 'செஸ்' விதிப்பதுடன், வரி செலுத்தாமல் செல்லும் வாகனங்களை பறக்கும் படை அமைத்து பல மடங்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட செயல்களால், இந்த மாவட்டங்களுக்கு வியாபாரிகள் வர மறுக்கின்றனர். இதனால், மக்காச்சோளம் தேக்கமடைந்து விவசாயிகள் மேலும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. உள்நாட்டு மக்காச்சோளத்துக்கு, ஒரு சதவீத 'செஸ்' விதித்த தமிழக அரசு, இதன் வாயிலாக, உள்நாட்டு மக்காச்சோளத்தை விற்க முடியாத அளவுக்கு விலையை உயர்த்திவிட்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்துக்கு சந்தையை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுகிறது.
விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் இந்த பாதிப்புக்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள, ஒரு சதவீத 'செஸ்' விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இதனை வேளாண் விற்பனை குழு வளாகங்களில் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் விற்பனை வணிகத் துறையினரால், பட்டியலிடப்பட்டுள்ள, 40 பொருட்களுக்கும், விவசாயிகள்- வியாபாரிகள் இடையே, நேரடியாக நடக்கும் விற்பனைக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, 'செஸ்' விதிப்பில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.