/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டீஸூக்கு நீச்சல் கற்றுக்கொடுங்க!
/
குட்டீஸூக்கு நீச்சல் கற்றுக்கொடுங்க!
ADDED : மே 04, 2024 11:21 PM
நீச்சல் ஒவ்வொரு குழந்தைக்கும் இன்றிமையாதது. தன்னை தானே காப்பாற்றிக் கொள்ள நீச்சல் பெரிதும் உதவும். ஒவ்வொரு ஆண்டும் துரதிர்ஷ்டவசமாக குழந்தைகள் நீர்நிலைகளில் முழ்கி இறக்கும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. எனவே, நீச்சல் ஆபத்துகள் குறித்து பெற்றோர் விரிவாக அறிய வேண்டும்.
குழந்தைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்றுத்தர வேண்டும். மீட்பு மற்றும் முதலுதவி குறித்து தெரிந்திருக்கவும், ஆரம்ப பள்ளியை விட்டு வெளியேறும் போது முக்கிய நீர் பாதுகாப்பு திறன்களைக் அறிந்திருக்கவும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். நீச்சல் முழுமையாக ஒரு விளையாட்டு, சிறந்த உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சியும் கூட.
அதிக எடை, பருத்த உடல் பருமன் அல்லது உயர் ரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவோருக்கு சிறந்த உடற்பயிற்சியாக நீச்சல் அமைகிறது. குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நீச்சல் கற்றுத்தருவதால், அது, அவர்களுக்கு உடற்பயிற்சியுமாக அது அமைந்து விடுகிறது.
எந்த இடத்தில் உங்கள் குழந்தைகளை ஒருபோதும் (கற்றுக்கொள்ளும் வரை) தனியாக நீந்த விடாதீர்கள். நீச்சல் அடிக்கும்போது அவர்கள் பக்கத்தில் இருங்கள். நீச்சல் குளங்களின் விதிகளை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். குறிப்பாக, அவர்களை தண்ணீரை விழுங்கக் கூடாது என்றும், துவக்கத்திலேயே நீருக்கடியில் நீந்த வேண்டாம் என்றும் சொல்லுங்கள்.
எப்போதும் மறக்காது!
திருப்பூர் மாவட்ட நீச்சல் பயிற்சி கழக செயலாளர் சிவக்குமார் கூறியதாவது:
நீச்சலுக்கு முறையான பயிற்சி அவசியம். நமது ஊரில் விழிப்புணர்வு குறைவாகத்தான் உள்ளது. வெயிலை குறைக்க தான் நீச்சல் அடிக்க குளத்தை தேடுகின்றனர்; நீந்த வருகின்றனர். பத்து, 12 வயது உள்ளவர்கள், பயிற்சியாளர் மூலம், ஒரு மாதத்தில் நீச்சல் கற்றுக்கொள்ளலாம்.
நீச்சலில் பல்வேறு நிலைகள் உள்ளது. அவற்றை முழுமையாக கற்றுக்கொண்டால், எந்த இடத்திலும் பயப்பட வேண்டியதில்லை. தைரியமாக நீந்த முடியும். தைரியமாக இருந்தால் நான்கு வயதில் கூட நீச்சல் கற்றுக் கொள்ளலாம். அவரவர் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிறுவயதிலே நீச்சல் தெரிந்திருப்பது அவசியம். நீச்சல் குழந்தை நடந்து பழகுவது போன்று, ஒரு முறை கற்று விட்டால் எப்போதுமே மறக்காது. இவ்வாறு அவர் கூறினார்.