/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழமையான வாரச்சந்தை பராமரிப்பின்றி...சுவடின்றி மறைகிறது! வாளவாடியை மறந்ததா ஒன்றிய நிர்வாகம்
/
பழமையான வாரச்சந்தை பராமரிப்பின்றி...சுவடின்றி மறைகிறது! வாளவாடியை மறந்ததா ஒன்றிய நிர்வாகம்
பழமையான வாரச்சந்தை பராமரிப்பின்றி...சுவடின்றி மறைகிறது! வாளவாடியை மறந்ததா ஒன்றிய நிர்வாகம்
பழமையான வாரச்சந்தை பராமரிப்பின்றி...சுவடின்றி மறைகிறது! வாளவாடியை மறந்ததா ஒன்றிய நிர்வாகம்
ADDED : ஆக 14, 2024 02:17 AM

உடுமலை:உடுமலை அருகே, நுாற்றாண்டை நெருங்கும், பழமை வாய்ந்த வாரச்சந்தை பராமரிப்பின்றி பரிதாப நிலைக்கு மாறியும் ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; சந்தை வளாகம் முழுவதும் திறந்தவெளி 'பார்' ஆக மாற்றப்பட்டு, துாய்மைப்பணிகள் கூட சவாலாக மாறியுள்ளது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட வாளவாடியில், 1942ல், வாரச்சந்தை துவக்கப்பட்டது. சுற்றுப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த, நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சந்தைக்கு, முதலில் ஓடுகளுடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டு, கடைகள் செயல்பட்டு வந்தது.
நுாற்றாண்டை நெருங்கி வரும் இந்த வாரச்சந்தையின் நிலை, பார்ப்பவர்களை வேதனையடையச்செய்கிறது.
சந்தையில், கடந்த, 1949ல் கட்டப்பட்ட கட்டடத்தின், மேற்கூரை ஓடுகள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டுள்ளது; மரச்சட்டங்கள் மழையில் நனைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது.
இருப்பினும், வேறு வழியின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து, விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
கருங்கற்களால் கட்டப்பட்ட சுவர் இன்றும் கம்பீரமாக நிற்கும் நிலையில், மேற்கூரையை மட்டும் பராமரித்து இருந்தால், நுாற்றாண்டை கடந்து சந்தை கட்டடம் சாதனை படைத்திருக்கும்.
ஆனால், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினருக்கு இந்த கட்டடத்தை பராமரிக்கவோ, ஆய்வு செய்து பாதுகாக்கவோ மனமில்லை. பல ஆண்டுகளாக மனுக்கொடுத்தும், வாரச்சந்தை பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.
திறந்தவெளி 'பார்'
சந்தை வளாகத்தில் பழைய கட்டடம் மட்டுமல்லாது, திறந்தவெளியில் கடைகள் அமைக்க, கான்கிரீட் மேடையும், அதையொட்டி, காத்திருப்பு கூடமும் கட்டப்பட்டது.
இந்த கூடத்தின் மேற்கூரையிலும் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடைகள் அமைக்கும், கான்கிரீட் மேடை திறந்தவெளி 'பார்' ஆக மாறி விட்டது.
இரவு நேரங்களில், அத்துமீறி சந்தை வளாகத்துக்குள் செல்லும் 'குடி'மகன்கள் காற்றோட்டமாக அமர்ந்து மது அருந்தி விட்டு, காலி மதுபாட்டில்களை, அங்கேயே உடைத்து வீசிச்சென்று விடுகின்றனர்.
இதனால், நாள்தோறும், துாய்மைப்பணிகளை மேற்கொள்ளும், துாய்மைக்காவலர்கள், காயப்படும் நிலை உள்ளது. வளாகத்துக்குள் காணும் இடமெல்லாம் மதுபாட்டில்களே காணப்படுகிறது.
சந்தை கூடுவதற்கு முன், அப்பகுதியை துாய்மைப்படுத்தவே திணறி வருகின்றனர். வளாகத்துக்கு முன்பகுதியில் கேட் இருந்தாலும், பிற பகுதியில் உயரம் குறைந்த சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.