/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊட்டமேற்றிய தொழு உரத்தால் பயன்கள் ஏராளம் வேளாண் துறை வழிகாட்டல்
/
ஊட்டமேற்றிய தொழு உரத்தால் பயன்கள் ஏராளம் வேளாண் துறை வழிகாட்டல்
ஊட்டமேற்றிய தொழு உரத்தால் பயன்கள் ஏராளம் வேளாண் துறை வழிகாட்டல்
ஊட்டமேற்றிய தொழு உரத்தால் பயன்கள் ஏராளம் வேளாண் துறை வழிகாட்டல்
ADDED : செப் 09, 2024 09:43 AM
உடுமலை : பயிர்களுக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் பயன்படுத்தும் போது, பயிர்கள் வளர்ச்சி, மகசூல் அதிகரிப்பு, உரச்செலவு குறைவு உள்ளிட்ட பல்வேறு பயன்கள் கிடைக்கிறது, என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க, ஒரு ஏக்கருக்கு, நன்கு மக்கிய எரு, 600 கிலோ, சூப்பர் பாஸ்பேட், 100 கிலோ, வேப்பம் புண்ணாக்கு, 10 கிலோ, சூடாமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பெசிலியோமைசிஸ், வேம்பம்புண்ணாக்கு, பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றில், ஒவ்வொன்றிலும் தலா ஒரு கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும்.
மக்கிய எருவுடன், சூப்பர் பாஸ்பேட் உரத்தை நன்கு கலந்து, பிறகு வேப்பம் புண்ணாக்கு மற்றும் உயிர் உரங்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு கிளறி விட வேண்டும்.
அதில், சிறிது நீர் தெளித்து நிழலான பகுதியில், மூடாக்கு போட்டு வைக்க வேண்டும். ஊட்டமேற்றிய தொழு உரத்தின் ஈரப்பதம் புட்டு பதத்தில் இருக்க வேண்டும். சுமார், 10 முதல், 30 நாட்களுக்கு பின், அதனை பிரித்து பயிருக்கு பயன்படுத்தலாம்.
இவ்வாறு, ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்களுக்கு பயன்படுத்தும் போது, அவற்றுக்கு தேவையான மணிச்சத்து மற்றும் உயிர் உரங்களின் சத்துக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கிறது.
மணிச்சத்து உள்ள உரங்களை சாதாரணமாக பயன்படுத்தும் போது அதிலுள்ள மணிச்சத்தானது, 10 சதவீதம் மட்டுமே பயிருக்கு கிடைக்கும். மீதம் உள்ள மணிச்சத்து, மண்ணிலேயே வீணாக படிந்து விடும்.
ஆனால், ஊட்டமேற்றிய தொழு உரம் பயன்படுத்தும் போது, 80 சதவீதம் சத்துக்கள் பயிருக்கு கிடைக்கிறது. மேலும், அங்கக அமிலங்களோடு மணிச்சத்தும் சேரும்போது, கரையாத நிலையிலுள்ள மணிச்சத்து பயிர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.
விதை நேர்த்தி செய்வதற்கு, விதையுடன் டிரைக்கோடெர்மாவிரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களை ஒரு கிலோ விதைக்கு, 10 முதல், 20 கிராம் அளவுள்ள உயிர் உரங்களை, ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து சிறிது நேரம் நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.
இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளின் முளைப்புத்திறன், 80 சதவீதம் வரை அதிகரிப்பதோடு, நோய் தாக்காத தரமான நாற்றுகள் கிடைக்கும்.
உயிர் இடுபொருள் வகைகள்
அசோஸ்பைரில்லம், - தழைச்சத்தை கொடுக்கும் உயிர் உரமாகவும், பாஸ்போ பாக்டீரியா,-மணிச்சத்தைக் கொடுக்கும் உயிர் உரமாகவும், வேப்பம்புண்ணாக்கு, -நுண்ணுாட்டச்சத்தை கொடுக்கும் உயிர் உரமாகவும் உள்ளது.
டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் உயிர் பூஞ்சாணக்கொல்லியாகவும், பெசிலியோமைசிஸ் லிலாசினஸ், உயிர் நுாற்புழுக்கொல்லியாகவும், பிவேரியா பேசியான உயிர் பூச்சிகொல்லியாகவும் செயல்படுகிறது.
இது போன்ற, இயற்கை உரம் மற்றும் ஊட்டமேற்றிய தொழுவுரங்களை பயன்படுத்தி செலவை குறைத்து அதிக மகசூல் எடுக்கலாம். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.