/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வுகள் எளிதானால் இலக்கும் எளிதாகும்
/
தீர்வுகள் எளிதானால் இலக்கும் எளிதாகும்
ADDED : ஆக 29, 2024 11:02 PM
''பொருளாதார சுழற்சியில், சிறு, குறு நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன'' என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரக்கூடியது ஆயத்த ஆடை உற்பத்தி. இதில், திருப்பூரை பொறுத்தவரை பின்னலாடை ஏற்றுமதியில், இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 54 சதவீதம் திருப்பூர் பங்களிக்கிறது; கிட்டத்தட்ட, 37,500 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டு வர்த்தகம் நடக்கிறது. குறிப்பிட்ட, 37,500 கோடி வர்த்தகத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை, 100 நிறுவனங்கள் செய்கிறது. எஞ்சிய, 17,500 கோடி ரூபாய் வர்த்தகத்தை, எஞ்சியுள்ள, 1,900 நிறுவனங்கள் செய்கின்றன.
திருப்பூரை பொறுத்தவரை, 2,000 ஏற்றுமதியாளர்கள், 20 ஆயிரம் தொழில் நிறுவனங்கள், 10 லட்சம் தொழிலாளர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இவையனைத்தும், குறு, சிறு, நடுத்தர உற்பத்தியாளர்கள் பிரிவின் கீழ் தான் வருகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீட்டில், 120 பேருக்கு வேலை அளிக்கும் தொழிலாக இருந்து வருகிறது.
அதுபோக, மறைமுக வேலை வாய்ப்பும் பெறுகின்றனர். அந்த வகையில், பொருளாதார சுழற்சியில், சிறு, குறு நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.கோவிட் இரு அலைகள், ரஷ்யா - உக்ரைன் போர், மேலை நாடுகளில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சில சிக்கல்கள் இருந்தன. 'கோவிட்'டுக்கு பின், சீனாவை மட்டும் முக்கிய சந்தையாக கருதாமல், பிற நாடுகளுக்கான சந்தையிலும் மேற்கத்திய நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. கடந்த, 10 ஆண்டாகவே, பல்வேறு சிக்கல்களில் இருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க பெரியளவில் கவனம் செலுத்தவில்லை.
வங்கிக்கடன், மானியம் பெறுவதில் சிக்கல், மின் கட்டண உயர்வு போன்ற பிரச்னைகள் உள்ளன. இதற்கான தீர்வு காணப்பட்டால், 38 ஆயிரம் கோடி என்ற நிலையில் உள்ள வர்த்தகத்தை, அடுத்த, 5 ஆண்டுகளில், 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த முடியும்.ம.பி., உ.பி., ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் நிறுவனங்கள் துவங்க அம்மாநில அரசுகள் பல சலுகைகளை அறிவித்துள்ளன. அதே போன்று, தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி, அதன் வாயிலாக வேலை வாய்ப்பு உருவாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

