/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரான்ஸ் மாணவியை வியக்க வைத்த 'கூட்டுக்குடும்பம்'
/
பிரான்ஸ் மாணவியை வியக்க வைத்த 'கூட்டுக்குடும்பம்'
ADDED : மார் 08, 2025 11:07 PM

'தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என, உறவுகள் அனைத்தும் கூட்டுக்குடும்பமாக வாழும் கலாசாரம், பண்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது,' என விழிகள் விரிய ஆச்சர்யப்படுகிறார், பிரான்ஸ் மாணவி சிடோனி.
உலகளவில் செயல்படும் ரோட்டரி அமைப்பில், 'இளைஞர் பரிமாற்ற திட்டம்' உண்டு. அதில், ஒவ்வொரு நாட்டில் வசிக்கும், 17 வயது நிரம்பிய மாணவ, மாணவியர் வேறு நாடுகளுக்கு சென்று, ஓராண்டு அங்கு தங்கி, அந்நாட்டின் கல்வி, கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள செய்வது தான், இத்திட்டத்தின் நோக்கம்.
அந்த வகையில், ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி சார்பில், பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த சிடோனி என்ற மாணவி, அவிநாசியில் தங்கி, நம் நாட்டின் கல்வி, பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றை அறிந்து வருகிறார்.
ரோட்டரி அமைப்பின் இளைஞர் பரிமாற்ற திட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் வீட்டில் தங்கியுள்ள, பிரான்ஸ் மாணவி சிடோனி, நம்மிடம் பகிர்ந்தவை:
நாடு விட்டு நாடு வருவதென்பது, ஒரு நாட்டின் பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றை அறிந்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. இதன் வாயிலாக, படிப்பு முடிந்ததும், வேலை வாய்ப்பு பெறுவதென்பது எளிதாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என, அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
பள்ளியிலும் உடன் படிக்கும் மாணவியர், எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல், பழகுகின்றனர்; அவர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் என்னை இணைத்துக் கொள்கின்றனர். இந்த நட்பு, பிடித்திருக்கிறது. எந்தவொரு கோவில் உட்பட வழிபாட்டு தலங்களுக்கு சென்றாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றனர். ஆழமான ஆன்மிக சிந்தனையுடன் வாழ்கின்றனர். குறிப்பாக, மக்களிடம் சேமிப்பு பழக்கம், சிக்கனமாக செலவழிப்பது போன்ற பண்புகள் மாறுபட்ட அனுபவத்தை ஏற்படுத்துகிறது. எங்கள் நாட்டில் கல்வியும், மருத்துவமும் இலவசம் என்பதால், மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகம்; நிறைய செலவு செய்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினர்.
குடும்பத்தில் ஒன்றாக...
ரோட்டரி இளைஞர் பரிமாற்ற திட்ட தலைவர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:
இளைஞர் பரிமாற்றத் திட்டத்தில், பல்வேறு நாடுகளின் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் வரும் மாணவ, மாணவியர், குறைந்தது, 6 மாதம் பள்ளிக்கு செல்ல வேண்டும். 2 மாதம் சுற்றுலா செல்ல வேண்டும். பிரான்ஸ் மாணவி சிடோனி, எங்கள் குடும்பத்தினருடன் நன்கு பழகுகிறார், குடும்பத்தில் ஒருவராகவே, மாறிவிட்டார். நம் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு கண்டு வியக்கிறார்; நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.