/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்று ஆடுகளை காத்த 'நெட்டைக்கால் குடிசை'
/
அன்று ஆடுகளை காத்த 'நெட்டைக்கால் குடிசை'
ADDED : மார் 03, 2025 05:16 AM
பொங்கலுார் : கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் வரை எல்லா இடங்களிலும் நரிகள் அதிகமாக வாழ்ந்து வந்தன. நரிகளிடமிருந்து ஆடுகளை காப்பாற்ற பட்டிகள் தோறும் விவசாயிகள் நாய்களை வளர்த்து வந்தனர்.
நாய்களையும் சமாளித்து நரிகள் பட்டியைக் கடித்து உள்ளே புகுந்து ஆடுகளை வேட்டையாடி விடும் என்பதால் விவசாயிகள் ஒவ்வொரு பட்டியிலும் நெட்டைக்கால் குடிசைகளை அமைத்திருந்தனர்.
இவை சாதாரண கட்டிலில் இருந்து மாறுபட்டு உயரமான கால்களை கொண்டிருக்கும். அதன் மேல் வட்ட வடிவில் கூரை வேய்ந்திருப்பர். அதன் உள்ளே ஒரு ஆள் படுக்கும் வசதியுடைய கட்டிலும் இருக்கும்.
அதில் விவசாயிகள் இரவு நேரங்களில் காவல் இருப்பர். மழை, பனி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு ஆடுகளும் நனையாது. விவசாயிகளும் பாதுகாப்பாக தங்கி இருந்தனர்.
இதுதவிர, பட்டிகள் முள்ளுடன் கூடிய மர குச்சிகளை கொண்டு நெருக்கமாக அமைந்திருந்தனர். இப்படி மூன்றடுக்கு பாதுகாப்புடன் பட்டி அமைக்கப்பட்டு இருந்ததால் வேட்டை விலங்குகளால் பட்டியை நெருங்க முடியாது.
கடந்த, 30 ஆண்டுகளில் நரிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அவற்றின் இனமே பெரும்பகுதி அழிந்து விட்டது. இதனால், விவசாயிகள் ஆடுகளை நரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
எனவே, பட்டியில் அமைத்திருந்த நெட்டைக்கால் குடிசைகளையும் விவசாயிகள் கைவிட்டனர். பட்டியில் பெரியவர்கள் காவல் இருந்தனர். சமீப காலமாக நெட்டைக்கால் குடிசை அமைப்பது மறந்தே போய்விட்டது.
''நாய்களின் உணவு பழக்கம் மாறியதால், சில நாய்கள் வெறி நாய்களாக மாறிவிட்டன. ஆடுகளைப் பாதுகாத்த நாய்களே, இன்று நரிகளைப் போன்று ஆடுகளை வேட்டையாட துவங்கி விட்டன. வெறி நாய்களால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
நெட்டைக்கால் குடிசைகளை மறந்து போனதால் ஆடுகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிவிட்டது. அது வெறி நாய்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது'' என்கின்றனர், மூத்த விவசாயிகள் சிலர்.