/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டுச்சாவடி எண்ணிக்கை உயர்கிறது
/
ஓட்டுச்சாவடி எண்ணிக்கை உயர்கிறது
ADDED : ஆக 29, 2024 10:57 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதியிலும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2025-க்கான முன் திருத்த பணிகள், கடந்த 20ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர்களின் வீடு தேடிச்சென்று, விவரங்களை சரிபார்த்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, அதிக வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச்சாவடி உருவாக்கப்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்டியல் படி, 23 லட்சத்து 45 ஆயிரத்து எட்டு வாக்காளர் உள்ளனர். மொத்தம், 2,520 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. ஒரு பூத்தில், 1,500க்கும் அதிகமான வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச்சாவடி அமைப்பதற்காக, வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று, ஓட்டுச்சாவடி வரைவு பட்டியலை வெளியிட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
திருப்பூர் வடக்கு தொகுதியில், புதிதாக 7, தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகளில் தலா ஒன்று வீதம், ஒன்பது புதிய ஓட்டுச்சாவடிகளுடன் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை, 2,529 ஆக உயர்கிறது.
ஆட்சேபனை இருப்பின், வரும் செப்., 9ம் தேதிக்குள் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை அழைத்து கூட்டம் நடத்தி, வரைவு பட்டியல் இறுதி செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், சப்-கலெக்டர் சவுமியா, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் தங்கவேல் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.