/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலத்துடன் அணுகுசாலை இணைக்காததால் சிக்கல்
/
பாலத்துடன் அணுகுசாலை இணைக்காததால் சிக்கல்
ADDED : ஜூன் 25, 2024 12:51 AM

திருப்பூர்:திருப்பூர் வீரபாண்டி பகுதியிலிருந்து அல்லாளபுரம், மீனாம்பாறை வழியாக கண்டியன்கோவில் செல்லும், மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ரோடு உள்ளது.
அல்லாளபுரம் அருகே, ரோட்டோரம் அல்லாளபுரம் குளம் உள்ளது. இதன் தடுப்பணை நிரம்பி வழியும் போது, வெளியேறும் நீர் ரோட்டைக் கடந்து செல்கிறது. இந்த இடத்தில் தரை மட்டப்பாலம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்தது.
இப்பாலம் 10 குழாய்கள் கொண்டதாக இருந்தது.மழைக்காலத்தின் போது, மழை நீர் அதிகரித்து வெளியேறும் நாட்களில் இந்த தரைப்பாலத்தை மூழ்கியடித்துக் கொண்டு மழைநீர் செல்வது வாடிக்கையாக இருந்தது. இவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பெரும் சிரமம் நிலவியது. பாலத்தில் இருந்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு நீர் செல்வது தடைப்பட்டது.
இதற்கு தீர்வு காணும் வகையில் பாலத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட திட்ட மிடப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், 2 கோடி ரூபாய் செலவில் இந்த இடத்தில் புதிதாக உயர் மட்டப் பாலம் கட்டும் பணி கடந்தாண்டு டிச., மாதம் துவங்கியளது.
பாலம் கட்டுமானப் பணி கடந்த இரு மாதம் முன் முடிவுற்றது. இதில் 28 மீட்டர் நீளத்தில் பெட்டி வடிவிலான 5 குழாய்கள் பொருத்தி அதன் மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பாலத்தின் இரு புறத்திலும் தலா 40 மீட்டர் நீளத்தில் அணுகு சாலையும் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பாலம் மீது அணுகு சாலை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால், இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கும் ஆளாகின்றனர்.