/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஸ்மோக் பிஸ்கெட்' ஆபத்து; நடவடிக்கை தீவிரம்
/
'ஸ்மோக் பிஸ்கெட்' ஆபத்து; நடவடிக்கை தீவிரம்
ADDED : ஏப் 27, 2024 12:43 AM
திருப்பூர்;ஆபத்தை ஏற்படுத்தும் 'ஸ்மோக் பிஸ்கெட்' விற்பனைக்கு கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரம் காட்டிவருகின்றனர்.
சிறுவர்களை கவர்ந்திழுக்கும் வகையிலான புதுப்புது சாக்லெட், உணவு பொருட்கள் தொடர்ந்து அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள், அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமி சேர்த்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள், அவற்றை உண்பவர்களுக்கு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன.
தற்போது, 'ஸ்மோக் பிஸ்கெட்' விற்பனை பரவலாகி வருகிறது. மைனஸ் 196 டிகிரி என்கிற அதீத உறை நிலையில், திரவ நைட்ரஜனை, 10 லிட்டர், 20 லிட்டர் கன்டெய்னர்களில் அடைத்து வைத்துக்கொள்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் கேட்கும்போது, பேப்பர் கப்பில், சாதாரண பிஸ்கட்களை போட்டு, அதன்மீது, நைட்ரஜனை நனைத்து கொடுக்கின்றனர்.
'ஸ்மோக் பிஸ்கெட்டை' உண்ணும்போது, திரவ நிலையில் உள்ள நைட்ரஜன், காற்றின் வெப்பத்தில் ஆவியாகி புகையாக எழுகிறது. உண்பவரின் வாய் மற்றும் மூக்கிலிருந்து புகை கிளம்புகிறது. இதை ஒரு மேஜிக் போல உணரும் சிறுவர்கள், ஸ்மோக் பிஸ்கெட்டை வாங்கி ருசிக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில், ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்ட ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான். இதையடுத்து, தமிழகத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஸ்மோக் பிஸ்கெட் விற்பனையை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள், ஸ்மோக் பிஸ்கெட் விற்பனை குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த் திருவிழாவின்போது, திருவிழா கடையில் ஸ்மோக் பிஸ்கெட் விற்பனை செய்ததை கண்டறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர்.
திருவிழா கடைகளில் ஆய்வு
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது: 'ஸ்மோக் பிஸ்கெட்' என்கிற பெயரில், திரவ நைட்ரஜனில் பிஸ்கெட்டில் நனைத்துக்கொடுக்கின்றனர். தவறுதலாக திரவ நைட்ரஜன் உடலுக்குள் சென்றுவிட்டால், உடல் உறுப்புகள் அனைத்தையும் உறையச் செய்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது.
இதை உணர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில், ஸ்மோக் பிஸ்கெட் விற்பனையை எப்போதுமே அனுமதிப்பதில்லை. கடந்த 2023, ஏப்ரல் மாதம், உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவிலேயே, வியாபாரி ஒருவர் ஸ்மோக் பிஸ்கெட் விற்பனைக்கு கொண்டுவந்ததை கண்டறிந்து, தடுத்துவிட்டோம்.
தற்போது, அவிநாசி தேர்த்திருவிழாவில் ஸ்மோக் பிஸ்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிரந்தர கடைகளில் ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்யப்படுவதில்லை. திருவிழா கடைகளிலேயே, இவற்றை விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். எனவே, திருவிழா நடை பெறும் பகுதிகளில் உடனடியாக சென்று ஆய்வு நடத்து கிறோம்.
திருப்பூர் மாவட்டத்தில், கடை வைத்திருப்போர் உள்பட வியாபாரிகள் யாரும் ஸ்மோக் பிஸ்கெட் விற்பனை செய்யக்கூடாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மோக் பிஸ்கட் வாங்கிக் கொடுக்க கூடாது. ஆபத்து விளைவிக்கும் உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து, 94440 42322 என்கிற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

