ADDED : ஆக 25, 2024 12:29 AM
பொங்கலுார்:பயிர் சாகுபடியுடன் பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை குறைவாகவே பெய்தது.
இதனால், தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடை விவசாயிகள் தவித்து வந்தனர். வைக்கோல், அடர் தீவனம், கழிவுப்பஞ்சு போன்றவற்றை விலைக்கு வாங்கி கால்நடைகளை காப்பாற்றி வந்தனர். பால் உற்பத்தியும் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆடி மாதம் பெய்த தென் மேற்கு பருவ மழை வரப்பிரசாதமாக அமைந்தது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மழையால் மேய்ச்சல் நிலங்களில் கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் நன்கு வளர்ச்சி அடைய துவங்கி உள்ளது.
இதனை பயன்படுத்தி கம்பு சோளம் மற்றும் மசால் வகை பயிர்களை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். தீவன பற்றாக்குறை நீங்கி உள்ளதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

