/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆறுதலான வார்த்தையே வெற்றியை தேடித்தரும்'
/
'ஆறுதலான வார்த்தையே வெற்றியை தேடித்தரும்'
ADDED : ஆக 18, 2024 11:25 PM

திருப்பூர்;''தொழில் நடத்துவோர், பணியாளர்களிடம் கூறும் ஆறுதலான வார்த்தையே, வெற்றியை தேடித்தரும்,'' என, எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசினார்.
திருப்பூர் 'டீசா' சார்பில், தொழில்துறை வளர்ச்சிக்கு உழைக்கும் அலுவலர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில், 'டீசா' நிறுவன தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார்.
எழுத்தாளர் பவா செல்லத்துரை, திரைப்பட இயக்குனர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். 'சைமா' தலைவர் ஈஸ்வரன், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'டீமா' தலைவர் முத்துரத்தினம், மாவட்ட நுால் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் செல்வராஜ், வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர் குமார்துரைசாமி உட்பட, தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏற்றுமதி நிறுவன அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களை பாராட்டி, தொழில் அமைப்பு நிர்வாகிகள் விருது வழங்கி கவுரவித்தனர். இயக்குனர் குமார் எழுதிய, 'காலமே போதி மரம்' என்ற நுால் நேற்று வெளியிடப்பட்டது. முன்னதாக, பரதநாட்டியம், தப்பாட்டம், கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில்,'' மெஷின்கள் வாழ்க்கை முழுவதும் நம்மை வழிநடத்தி விடாது; தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் கடைசி வரை உடனிருக்காது. மெஷின்களை போல் நடத்தாமல், அனைவரையும் மனிதநேயத்துடன் நடத்த வேண்டும். தொழில் நடத்துவோர், அலுவலர் மற்றும் பணியாளர்களிடம் கூறும் ஆறுதலான வார்த்தையே, வெற்றியை தேடித்தரும். ஆதரவான வார்த்தையால் யாருக்கும் நஷ்டம் இல்லை; லாபம் உறுதியாக கிடைக்கும்,'' என்றார்.
-----
'டீசா' சார்பில் விருதுகள் வழங்கும் விழா, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. எழுத்தாளர் பவா செல்லத்துரை, டைரக்டர் குமார் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அருகில் 'டீசா' தலைவர் சுரேஷ்பாபுவுடன் 'சைமா' தலைவர் ஈஸ்வரன், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, 'டீமா' தலைவர் முத்துரத்தினம், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர்.

