/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலையை கடக்க போராட்டம் குறியீடுகள் இல்லாததால் சிக்கல்
/
தேசிய நெடுஞ்சாலையை கடக்க போராட்டம் குறியீடுகள் இல்லாததால் சிக்கல்
தேசிய நெடுஞ்சாலையை கடக்க போராட்டம் குறியீடுகள் இல்லாததால் சிக்கல்
தேசிய நெடுஞ்சாலையை கடக்க போராட்டம் குறியீடுகள் இல்லாததால் சிக்கல்
ADDED : ஜூலை 22, 2024 03:07 AM

உடுமலை;பஸ் ஸ்டாண்ட் அருகே, நடைமேம்பாலம் காட்சிப்பொருளாக மாறியுள்ள நிலையில், போதிய குறியீடுகள் இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையை கடக்க, மக்கள் திணறி வருகின்றனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில், கணியூர், பழநி, தாராபுரம், திருப்பூர், செஞ்சேரிமலை ஆகிய வழித்தட பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியிலிருந்து, மக்கள் வெளியேற ஆறு நுழைவாயில்கள் உள்ளன.
இவ்வாறு, ஆறு நுழைவாயில்களிலிருந்து வெளியேறும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் பிற பகுதிகளுக்கு செல்ல முடியும். இவ்வாறு, நெடுஞ்சாலையை கடந்து செல்ல மக்களுக்கு எவ்வித குறியீடுகளும், நடைபாதையும் அமைக்கப்படவில்லை.
பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ரவுண்டானாவில் இருந்து திரும்பி, தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதியை கடக்கும் வரை அதிவேகமாக செல்கின்றன.
அப்போது, ரோட்டை கடக்க முயலும் பயணியர் விபத்திற்குள்ளாகின்றனர். பல்வேறு இடங்களில் மக்கள் ரோட்டை கடப்பதால், ஏற்படும் விபத்துகளுக்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
காலை மற்றும் மாலை நேரங்களில், ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் ரோட்டை கடக்க திக்... திக்... திக்... பயத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
உடுமலை நகருக்கு பை - பாஸ் ரோடு வசதியில்லாததால், கனரக வாகனங்களும் பஸ் ஸ்டாண்ட் உட்பட நகரப்பகுதியின் வழியாகவே சென்று வருகின்றன.
பஸ் ஸ்டாண்ட் அருகே, குறிப்பிட்ட துாரத்துக்கு சென்டர் மீடியன் வைக்கப்பட்டு, மக்களுக்காக சில இடங்களில் இடைவெளி விடப்பட்டுள்ளது.
ஆனால், ரோட்டில், வெள்ளைக்கோடுகள் இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் வழக்கமான வேகத்தில் சென்று, மக்களை பயமுறுத்துகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, கட்டப்பட்ட 'லிப்ட்' வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
இதனால், வழக்கம் போல், சென்டர்மீடியன் இடைவெளியில் புகுந்து, தேசிய நெடுஞ்சாலையை மக்கள் கடந்து வருகின்றனர். ரோட்டின் மறுபக்கத்தில், தாறுமாறாக வாகனங்களை நிறுத்திக்கொள்வதால், தேசிய நெடுஞ்சாலையில், செல்லும் வாகன ஓட்டுநர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைகளுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், நகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீஸ் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

