/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழல் தேடி அலைமோதும் பயணிகள்: அவிநாசியில் 'அந்தோ' பரிதாபம்
/
நிழல் தேடி அலைமோதும் பயணிகள்: அவிநாசியில் 'அந்தோ' பரிதாபம்
நிழல் தேடி அலைமோதும் பயணிகள்: அவிநாசியில் 'அந்தோ' பரிதாபம்
நிழல் தேடி அலைமோதும் பயணிகள்: அவிநாசியில் 'அந்தோ' பரிதாபம்
ADDED : மே 03, 2024 01:23 AM

அவிநாசி:அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்து செல்லும் பஸ்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ரேக்'கில் நிற்காமல், வெட்ட வெளியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதால், பயணிகள் வெயிலில் வாடி வதங்குகின்றனர்; தகிக்கும் வெயிலில் நிழல் தேடி அலைமோதுகின்றனர்.
திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் அவிநாசி வழியாக தான் செல்கின்றன. இதில், அவிநாசி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்டுக்குள் தான், அனைத்து பஸ்களும் நுழைந்து, அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
அவிநாசி வழியாக மேட்டுப்பாளையம், கோவை, ஊட்டி உள்ளிட்ட ஊருக்கு செல்லும் தொலை துார பஸ்கள் மற்றும் திருப்பூர், கருமத்தம்பட்டி, நடுவச்சேரி, சேவூர் உள்ளிட்ட நகர பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள், ஒதுக்கப்பட்ட 'ரேக்'குகளில நிற்காமல், வெட்ட வெயில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால், பயணிகள் நீண்ட நேரம் வெயிலிலேயே நிற்க வேண்டியுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் கட்டு மானம் தரும் நிழலில், சிலர் நிழலுக்காக ஒதுங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையின் கூரை நிழலில், பெண் பயணிகள் பலரும் நிழலுக்காக அண்டி நிற்கின்றனர். 'தற்போது வெயில் தகிக்கும் நிலையில், மதியம், 12:00 முதல், 3:00 மணி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என, வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
ஆனால், பஸ் ஸ்டாண்டில், பயணிகள், நிழலில் ஒதுங்கி நின்று பஸ் ஏறிச் செல்வதற்குரிய கட்டமைப்பு இருந்தும் கூட, பயணிகள் வெயிலில் வாடி வதங்கிய படி தான், பஸ் ஏறி செல்ல வேண்டியிருக்கிறது. தொலைதுார பஸ் ஓட்டுனர்கள் கூறுகையில், 'அவிநாசி பஸ் ஸ்டாண்டுக்குள் ஓரிரு நிமிடங்கள் மட்டும் தான் நின்று செல்ல எங்களுக்கு நேர அட்டவணை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய நேரத்தில் ரேக்கிற்குள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல முடியாது,' என்கின்றனர்.
எனவே, போக்குவரத்து கழகமும், பேரூராட்சி நிர்வாகமும், பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.