/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் மண்டி காணப்படும் நீர் வழித்தடங்கள்: மழை பாதிப்பை தடுக்க துார்வாரணும்
/
புதர் மண்டி காணப்படும் நீர் வழித்தடங்கள்: மழை பாதிப்பை தடுக்க துார்வாரணும்
புதர் மண்டி காணப்படும் நீர் வழித்தடங்கள்: மழை பாதிப்பை தடுக்க துார்வாரணும்
புதர் மண்டி காணப்படும் நீர் வழித்தடங்கள்: மழை பாதிப்பை தடுக்க துார்வாரணும்
ADDED : மே 19, 2024 10:55 PM

உடுமலை:பருவமழை துவங்கியுள்ள நிலையில், உடுமலை நகரிலுள்ள ஓடைகள் மற்றும் மழை நீர் வடிகால்களை துார்வார, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகராட்சியில், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், ராஜவாய்க்கால் பள்ளம் என, 10 கி.மீ., துாரம் இயற்கை நீர் வழித்தடங்களாக உள்ளன. மழை காலங்களில் எளிதாக, வெள்ள நீர் வெளியேறும் வகையில் இயற்கையாக அமைந்துள்ள, இந்த ஓடைகள் அமைந்துள்ளன.
அலட்சியம் காரணமாக, தற்போது ஓடைகள் அடையாளத்தை இழந்துள்ளன. ஏழு குளங்களில் இருந்து வெளியேறும் கசிவு நீர் மற்றும் பெய்யும் மழை நீரும், ஓடைகள் வழியாக சென்று, உப்பாறு அணையில் இணையும்.
ஆக்கிரமிப்புகளால், ஓடைகள் பெருமளவு குறுகியுள்ளன. ஒரு சில இடங்களில், விவசாய நிலங்கள் மற்றும் கட்டடங்களால் நீர் வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது, நகராட்சியின் சாக்கடை கழிவு நீர் வெளியேற்றும் கால்வாயாகவும், குப்பை கொட்டும் மையமாகவும் மாறியுள்ளன.
இதனால், நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது. தற்போது, மழை பெய்யும் நிலையில், மழை வெள்ள நீர் வடிய வழியில்லாமல் ரோடுகளில் தேங்குகிறது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
அதோடு, நகரின் பிரதான போக்குவரத்து ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி, தளி, தாராபுரம், திருப்பூர் ரோடுகளில், கட்டப்பட்ட மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்பு செய்து மூடப்பட்டுள்ளன.
மழை பெய்தால், மழை நீர் முழுவதும் ரோடுகளில் ஓடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மழைக்கு முன், வடிகால்களை மீட்கவும், முழுமையாக துார்வார வேண்டும்.
மேலும், நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளிலும், மழை நீர் வடிகால் பராமரிப்பில்லாமலும், சிதிலமடைந்தும் உள்ளன. கழிவு நீர் எளிதாக வெளியேற வழியில்லாமல், குடியிருப்புகளில் தேங்கி, துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மழை பெய்தால், கழிவு நீருடன், மழை நீரும் ரோடுகளில் ஓடி சேறும் சகதியுமாக மாறி வருகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள், ஓடைகள் மற்றும் மழை நீர் வடிகால்களை உடனடியாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

