/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாரச்சந்தையை இடம் மாற்ற வேண்டும்! மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
/
வாரச்சந்தையை இடம் மாற்ற வேண்டும்! மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
வாரச்சந்தையை இடம் மாற்ற வேண்டும்! மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
வாரச்சந்தையை இடம் மாற்ற வேண்டும்! மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
ADDED : ஏப் 28, 2024 11:38 PM
உடுமலை;தேசிய நெடுஞ்சாலையையொட்டி, அபாய முறையில் நடத்தப்படும் வாரச்சந்தையை, இடம் மாற்றி, வசதிகளை மேம்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடத்துக்குளம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளத்தில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை செயல்படுகிறது. சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம விவசாயிகளும், மக்களும் பயன்பெற்று வருகின்றனர்.
இச்சந்தை பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும், அபாய முறையில், கடைகள் அமைத்து காய்கறி விற்பனை செய்கின்றனர்.
நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கும், கடைகளுக்கும் இடையே, காய்கறி வாங்க வருபவர்கள் நிற்பதுடன், அவர்களது வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.
இதனால், சந்தை நாளில், தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.
அபாய முறையில், வாரச்சந்தை நடப்பது குறித்தும், அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சந்தையை இடம் மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மடத்துக்குளம் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தாலுகாவுக்கு ஒரு உழவர் சந்தை என தி.மு.க., அரசு அறிவித்தது.
எனவே, மடத்துக்குளத்தில், உழவர் சந்தை அமையும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இத்திட்டத்துக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.
அவ்வகையில், தற்போது, அபாய முறையில் நடத்தப்படும் வாரச்சந்தையை இடம் மாற்றி, புதிதாக ஒரு உழவர் சந்தையையும், மடத்துக்குளத்தில் ஏற்படுத்தினால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

