/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலகம் சுற்றலாம்; பல மொழிகள் கற்கலாம்
/
உலகம் சுற்றலாம்; பல மொழிகள் கற்கலாம்
ADDED : மார் 31, 2024 11:56 PM

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார் பேசியதாவது:
'தினமலர்' நாளிதழ் குழுவினரின், மூன்று மாத உழைப்பால், இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவ, மாணவியர் நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். கற்றலைவிட கேட்டல் நன்மை பயக்கும். எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கலாம் என்று, திட்டமிட வேண்டும்.
'மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட்' படித்தால், அதிக சம்பளத்தை பெறலாம்; டாக்டருக்கு நிகராக சம்பாதிக்க முடியும். பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் இருந்தாலே போதும்.
இவ்வகை படிப்புக்கு, 'பிட்னஸ்' மிக முக்கியம். குறிப்பாக, மருத்துவத்துறை இயக்குனரகத்தில்,'பிட்னஸ்' சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, கண் பார்வை சரியாக இருக்க வேண்டும். கண் பார்வை சரியாக இல்லாதபட்சத்தில், கடல்சார் கல்வியை தேர்வு செய்ய இயலாது.
கடல்சார் கல்வி, ஐந்து பிரிவுகளாக இருக்கிறது. உணவு தயாரிப்பு, தயாரித்த உணவுகளை வாடிக்கையாளருக்கு பக்குவமாக வழங்குவது, வரவேற்பறை பணி, ஓட்டல் 'அகாமடேஷன்' மற்றும் கப்பலை பாதுகாப்பாக இயக்குவது என, தனித்தனி கல்விகள் உள்ளன.
80 சதவீதம் செயல்முறை
கடல்சார் கல்வியில், 80 சதவீதம் செயல்முறையாக இருக்கும்; 20 சதவீதம் மட்டும் கல்விமுறையாக இருக்கும்.
பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள்; சுற்றுலா கப்பல் என, பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளுக்கு சென்றுவர வேண்டும் என்பதால், பாஸ்போர்ட் உட்பட, மூன்று வகையான சான்றிதழ்கள் இக்கல்விக்கு அவசியமாகிறது. இக்கல்வி முடிக்கும் போது, 99.9 சதவீதம் ஆங்கில அறிவும் அவசியம்.
கப்பல்கள், அதிகபட்சம், 15 அடுக்குமாடியுடன் கட்டமைக்கப்படுகின்றன. ஷாப்பிங் மால், ஓட்டல்கள், தங்கும் அறைகள் என, பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. பணியில் சேரும், 2 மாதங்களுக்கு, மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். பிறகு, 1.50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வரும்.
அதிக வேலைவாய்ப்பு
உலகம் முழுவதும் சுற்றி வருவதால், பல்வேறு நாட்டினருடன் பழகலாம்; அதிக மொழிகளை கற்கவும் வாய்ப்புள்ளது. கடல்சார் கல்வியை தேர்வு செய்யும் முன், கல்லுாரிகளில் உரிய கட்டமைப்பு வசதி இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
கல்லுாரியில் பயின்று, ஐந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் விவரத்தை பெற்று சரிபார்க்கலாம். தற்போது, அதிகபட்சம், 12 ஆயிரம் பேர் பயணிக்கும் கப்பல்களும் வந்துள்ளன; அதிகப்படியான வேலை வாய்ப்பும் உள்ளது.கப்பலில், 16 மணி நேரம் வேலை பார்க்கின்றனர்.
15 நாட்கள் விடுமுறை; 15 நாள் பணி. லட்சக்கணக்கான சம்பளம் கிடைக்கும். கொரானாவுக்கு பிறகு, உணவு தயாரிப்பதிலும் பல்வேறு வளர்ச்சி கிடைத்துள்ளது. மாணவ, மாணவியர், கடல்சார் கல்வியில் கவனம் செலுத்தினால், அதிகப்படியான வேலை வாய்ப்புள்ளது.

