/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணையில் நீரில்லை; பருவமழை ஏமாற்றியதால் பாதிப்பு
/
அணையில் நீரில்லை; பருவமழை ஏமாற்றியதால் பாதிப்பு
UPDATED : ஏப் 21, 2024 02:56 AM
ADDED : ஏப் 21, 2024 01:39 AM

உடுமலை;பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் மட்டம் சரிவால், முதல் மண்டலபாசன காலம் ஒரு மாதத்திற்கு முன்பே, வரும், 23ல் நிறைவு பெறுகிறது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பி.ஏ.பி., முதல் மண்டலத்திற்குட்பட்ட, 94,521 ஏக்கர் நிலங்களுக்கு, பிப்.,12 முதல், மே 22 வரை, 100 நாட்களுக்கு, உரிய இடைவெளி விட்டு, இரண்டரை சுற்றுக்களில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதல் சுற்றில், பிப்.,12 முதல், மார்ச் 12 வரை நீர் வழங்கப்பட்டது. மார்ச் 27ல், இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பருவமழைகள் ஏமாற்றியதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
இதனையடுத்து, இரண்டாம் சுற்றுக்கு வழங்கப்படும் நீர் மேலும் குறைக்கப்பட்டு, வரும், 23ம் தேதி மாலை பாசனம் நிறைவு செய்யப்படுகிறது. நீர் பற்றாக்குறையால், ஒரு மாதத்திற்கு முன்பே, பாசனம் நிறைவு பெறுகிறது.
அதிகாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டு பருவமழைகள் ஏமாற்றின. நடப்பாண்டும், குளிர் கால மழை மற்றும் கோடை கால மழை பெய்யவில்லை. இதனால், 5 சுற்றுக்கு பதில், முதல் மண்டல பாசனத்துக்கு இரண்டரை சுற்றுக்கள் நீர் வழங்க அறிவிக்கப்பட்டது. அணையில் போதுமான நீர் இல்லாததால், பாசன காலத்தை மேலும் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில், மொத்தம், 1,610 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே, அரை சுற்று குறைக்கப்பட்ட நிலையில், 2வது சுற்றும் முன்கூட்டியே, நிறைவு செய்யப்படுகிறது.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
அணை நீர் மட்டம்
திருமூர்த்தி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 24.32 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,935 மில்லியன் கனஅடியில், 679 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு, 493 கனஅடி நீர் வரத்துள்ளது. அணையிலிருந்து, பிரதான கால்வாயில், வினாடிக்கு, 643 கனஅடி நீரும், தளி கால்வாயில், 57 கனஅடி நீரும், குடிநீருக்கு, 21 கனஅடி நீர், நீர் இழப்பு, 11 கன அடி என, 732 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.

