/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனை விதை நடவுக்கு ஏற்ற தருணமிது!
/
பனை விதை நடவுக்கு ஏற்ற தருணமிது!
ADDED : ஜூலை 25, 2024 12:15 AM

பொங்கலுார் : பருவமழை முடிந்த பின் பனை மரங்களில் பாளை வெடித்து கோடை காலத்தில் நுங்காக மாறுகின்றன. மாசி, பங்குனி மாதங்களில் நுங்கு சீசன் முடிந்த பின் முற்றிய காய்கள் பழமாக மாறுகின்றன. தற்பொழுது ஆடி மாதம் துவங்கியுள்ளது. இது பனம்பழ சீசன் காலமாகும்.
பழுத்த பழங்கள் மரத்தடியில் விழுந்து கிடக்கின்றன. விவசாயிகள் இவற்றை ஆடு, மாடுகளுக்கு பானமாக கரைத்து கொடுக்கின்றனர். இது ஒரு சத்து மிக்க பானம் ஆகும்.
பனங்கொட்டைகளை சிலர் கிழங்குக்காகவும், பனைமர நடவுக்காகவும் சேகரிக்கின்றனர். தற்பொழுது இவற்றை நடவு செய்தால் முளைப்பு திறன் மிகவும் வீரியமாக இருக்கும். தாமதமாக கொட்டைகளை நடும் பொழுது, பெரும் பகுதி முளைப்பதில்லை. முளைப்புத் திறன் 90 சதவிகிதம் குறைந்து விடும்.
விட்டுவிட்டு மழை பெய்யும் பொழுது பனங்கொட்டைகள் முளைத்து பின் கருகிவிடும். முளைத்து கருகிய கொட்டைகளை நடவு செய்தால் மீண்டும் முளைக்க வாய்ப்பு இல்லை. பனை மரம் நடவு செய்யும் ஆர்வம் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. தன்னார்வலர்கள் பலர் பனை நடவு செய்வதை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்கின்றனர்.
பனை நடவு செய்வதற்கு தற்பொழுது சிறந்த தருணம் ஆகும். ஆடி பட்டம் தேடி விதை என்பது பனை விதை நடவுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.