ADDED : செப் 07, 2024 12:31 AM
திருப்பூர்:ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும், இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
ஹிந்து முன்னணி உட்பட, ஹிந்து அமைப்பினர், மாவட்டம் முழுவதும் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த உள்ளனர். விநாயகர் சிலைகள், நேற்றே பந்தல்களுக்கு எடுத்துச் சென்று வைக்கப்பட்டன. இன்று காலை, கணபதி ேஹாம பூஜைகள் செய்து, பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
வழிபட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். வீடுகளிலும், களி மண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதும் பாரம்பரியமாக நடந்து வருகிறது. கொழுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல் போன்ற பதார்த்தங்கள் செய்து, படையலிட்டு, பழவகைகளை வைத்து, விநாயகருக்கு அருகம்புல் மாலை மற்றும் மலர்மாலைகள் அணிவித்து, இன்று வழிபாடு நடத்தப்படும்.
வீடுகளில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடுகளும் நடத்தப்படும் அதற்காக, அலங்கார பொருட்கள், வெள்ளை எருக்கன் பூ மாலை, அருகம்புல் மாலை, பழவகைகள், பூ வகைகள் விற்பனை, நேற்று களைகட்டியிருந்தது.