ADDED : ஆக 18, 2024 12:24 AM
திருப்பூர்:திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாகி வருவதால், தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு, தினமும் 14.50 டன் தக்காளி குவிகிறது. பத்து முதல், 13 டன் என இருந்த வரத்து, ஒரு டன் கூடுதலாகியுள்ளது. இதனால், தக்காளி மொத்த விலையில் கிலோ, 16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு, 1,960 கிலோ தக்காளி வரத்தாக உள்ளது.
வழக்கமாக, 1,500 கிலோ வரத்தாக இருக்கும் நிலையில், வழக்கத்தை விட, 250 முதல், 300 கிலோ உயர்ந்துள்ளது. இதனால், வடக்கு உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 18 ரூபாய். பேரம் பேசி தக்காளியை கிலோ, 12 முதல், 14 ரூபாய்க்கு வாங்கும் வியாபாரிகள், ஐந்து கிலோ, 20 ரூபாய்க்கு ரோட்டோர தள்ளுவண்டி கடைகளில் விற்கின்றனர். சில்லறை விலையில் தக்காளி, 20 முதல், 30 ரூபாய் தரத்துக்கு ஏற்ப விற்கப்படுகிறது.
மாற்றம் வரும்
தக்காளி வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'கடந்த வாரம் விலை குறைந்தாலும், நடப்பு வாரம் மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
மழை, இரவு நேர கனமழையால், தக்காளி விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தக்காளி வரத்து குறைய வாய்ப்புள்ளது. வரத்து குறையும் போது, விலை உயர வாய்ப்புள்ளது. ஆவணி பிறந்துள்ள நிலையில், வரும் வாரம் அடுத்தடுத்து முகூர்த்த தினம் வருவதால், தக்காளி விற்பனை அதிகரிக்கும்; விலை உயரும்,' என்றனர்.