/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளூரிலேயே ஹீமோபிலியா மருந்துகள்
/
உள்ளூரிலேயே ஹீமோபிலியா மருந்துகள்
ADDED : ஏப் 28, 2024 02:04 AM

ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய குறைபாடு. வழக்கமாக உடலில் சிறு காயம் ஏற்பட்டால் சில நிமிடங்களில் ரத்தக் கசிவு, தானாக நின்று விடும்.
பெரிய காயமாக இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் ரத்தம் நின்று விடும். ஆனால், ஹீமோபிலியா குறைபாடு உடையவருக்கு ரத்தம் உறையும் தன்மை இருக்காது. உடனடியாக உரிய சிகிச்சை எடுக்காவிடில், உயிருக்கு பாதிப்பு ஏற்படும்.
ஆண்டுதோறும் ஏப்., 17ம் தேதி உலக ரத்தம் உறையாமை தினம் (ஹீமோபிலியா டே) கடைபிடிக்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் காரணமாக அன்றைய தினம், நிகழ்வுகள் நடக்கவில்லை.
நேற்று, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ரத்த உறையாமை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பொது சுகாதாரத்துறை சிறப்பு டாக்டர் செண்பகஸ்ரீ முன்னிலை வகித்தார். டாக்டர் அருணா வரவேற்றார்.
மருத்துவக் கல்லுாரி 'டீன்' முருகேசன் பேசியதாவது:
ஹீமோபிலியாவுக்கு தேவையான ஆரம்ப கட்ட சிகிச்சைமுறை, மருந்துகள் திருப்பூருக்கு வந்து விட்டது. கடந்தாண்டு ஜூலை முதல் மார்ச் வரை மாவட்டத்தில், 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும்,மருந்துகளை தேடி நீங்கள் வெளியூர் பயணிக்க வேண்டியதில்லை.
புதிதாக ஏதேனும் மருந்துகள் விற்பனைக்கு வந்தால், அவற்றை அவ்வப்போது 'அப்டேட்' செய்து கொள்கிறோம். உடல் நிலை குறித்து டாக்டரிடம் அவ்வப்போது நோயாளிகள் தெரிவிக்க வேண்டும்.
அப்போது தான் தக்க பாதுகாப்பு நடவடிக்கை, சிகிச்சை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
மருத்துவக்குழுவினரிடம் ஏதேனும் குறைகள் இருந்தாலும், நேரடியாக என்னிடம் நீங்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் உமாசங்கர் பேசுகையில், ''உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
உடல்நிலையை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ரத்தம் உறையாத அளவு பிரச்னைகளை சந்திக்காதீர்; கவன முடன் இருங்கள்,'' என்றார்.

