/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பட்ஜெட்: மகிழ்ச்சியும் ஏமாற்றமும்!
/
மத்திய பட்ஜெட்: மகிழ்ச்சியும் ஏமாற்றமும்!
ADDED : ஜூலை 25, 2024 12:11 AM

திருப்பூர், : பட்ஜெட் அறிவிப்புகள், திருப்பூர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி, ஏமாற்றம் இரண்டையும் கலந்து வழங்கியுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் அறிவிப்பும், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதும், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் அறிவிப்பு இடம்பெற்றிருப்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கை விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு போதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ள நீர் நிலை பாதுகாப்பு மிகவும் அவசியமாகிறது. நீர் மாசுபாடு, நீர் திருட்டு, விவசாயத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், அணைகள் மேம்பாடு, காலாவதியான ஷட்டர்களை சீரமைப்பது, புதிய அணை கட்டுவது போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது கவலை அளிக்கிறது.
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து: விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்கிற நீண்டகால கோரிக்கை, நடப்பு பட்ஜெட்டிலும் நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்கிற அறிவிப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர், ஏராளமான சவால்களை எதிர்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள், இயற்கை விவசாயத்துக்கு எந்தளவு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். வேளாண் வளர்ச்சிக்கான பெரிய அளவிலான தொலைநோக்கு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தென்னிந்திய அட்டை பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கம் (கோவை மண்டலம்) தலைவர் சிவகுமார்: சோலார் மின்தகடுகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பெரிய நிறுவனங்கள், சூரிய மின் கட்ட மைப்பை நிறுவி, மின்தேவையை பூர்த்தி செய்ய முடியும். மின் கட்டண சுமையில் இருந்தும் ஓரளவு விடுபட முடியும். இதேபோல், சோலார் மின் கட்டமைப்பு முதலீடுகளுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில், ஜவுளித்துறைக்கு பிரத்யேக அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.