/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளில் பராமரிப்பில்லாத மைதானங்கள்; வீணாகும் மாணவர்களின் திறன்
/
அரசு பள்ளிகளில் பராமரிப்பில்லாத மைதானங்கள்; வீணாகும் மாணவர்களின் திறன்
அரசு பள்ளிகளில் பராமரிப்பில்லாத மைதானங்கள்; வீணாகும் மாணவர்களின் திறன்
அரசு பள்ளிகளில் பராமரிப்பில்லாத மைதானங்கள்; வீணாகும் மாணவர்களின் திறன்
ADDED : செப் 04, 2024 11:19 PM
உடுமலை : அரசுப்பள்ளிகளில் பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கும், உபகரணங்களை வழங்குவதற்கும் உரிய ஆய்வு நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை கோட்டத்தில் மட்டுமே, 30 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், விளையாட்டு பயிற்சிக்கு அடிப்படையாக உள்ள மைதானங்கள், உரிய வசதிகளுடன் இல்லாததால் மாணவர்களுக்கு போதிய பயிற்சி கிடைப்பதில்லை. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் முட்புதர்களாக மாறியுள்ளன.
கல்வியாண்டு தோறும் குறுமைய போட்டிகள் நடக்கிறது. ஆனால் அப்போட்டியிலும் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றாலும், அவர்கள் பெயரளவில் மட்டுமே விளையாடுகின்றனர்.
மாணவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாமலும், அதற்கான வசதிகள் இல்லாததும் இதற்கு காரணமாக உள்ளது.
அரசுப்பள்ளிகளில் விளையாட்டு மைதானத்துக்கான இடவசதி இருந்தாலும், ஆடுகளங்கள் அமைக்கப்படாமலும், அடிப்படை வசதியில்லாத ஆடுகளங்களுமாக உள்ளன. இப்பள்ளிகளின் கட்டமைப்புகளில், தற்போது வகுப்பறைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கும், ஸ்பான்சர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக, அவ்வப்போது, துாய்மைபடுத்துவது, ஆடுகளத்திற்கான அடிப்படை வசதிகளை சில பள்ளி நிர்வாகங்கள் செய்கின்றன.
ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளுக்கு இந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் விளையாட்டு திறன்களை இப்போது நடந்த குறுமைய போட்டிகளின் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.
அதேபோல், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கென விளையாட்டு உபகரணங்களும் அரசின் சார்பில் வழங்கப்படுவதில்லை.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகம் இருந்தும் கூட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை குறைகிறது. உடற்கல்வி வகுப்புகளிலும் பாடவகுப்புகள்தான் எடுக்கின்றனர்.
அதேபோல் பல பள்ளிகளில், உடற்கல்விக்கு தற்காலிக ஆசிரியர் மட்டுமே உள்ளனர். அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கென முக்கியத்துவம் மிகவும் குறைந்து வருகிறது.
மைதானங்களை புதுப்பிக்கவும், தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கும், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மாணவர்களின் விளையாட்டுத்திறன்களையும் மேம்படுத்த முடியும். இவ்வாறு, தெரிவித்தனர்.